Sunday, January 10, 2010

ஜனாதிபதித் தேர்தல் (வீரனைத் தேடும் போட்டி)


தின்றுகொண்டு
தின்றுகொண்டு
அவர்கள் ஒன்றாக
வரும்பொழுது
ஒருவாறு
தப்பித்த எனக்கு
கால்களை மேலே போட்டவாறு
இனி
பார்த்துக் கொண்டிருக்கலாம்
ஒருவன் மற்றவனைத்
தின்றுகொள்ளும் போது
குட்டை வால்
எஞ்சும் வரைக்கும்

மூலம் - மஹேஷ் முணசிங்ஹ (சிங்கள மொழியில்)
தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப்,
                    இலங்கை


நன்றி
# உயிர்மை
# இனியொரு
# நவீன விருட்சம்

Saturday, January 9, 2010

இந்தப் பதிவர் இப்போது இல்லை

என் இனிய ரிஷான்..
காற்றில் படபடக்கும்..
வெற்று காகிதங்களின்..
படபடப்பின்னும்
காதில் கேட்கலையோ...?

கைவிரல்
ரேகைகளை..
காதலித்து...
தினம்..தினம்..
முத்த தொய்வில்
மனம் குளிரும்...
உன் எழுதுகோல்
ஆங்கோர் ஓரமாய்
உன் தொடுதலுக்கு ஏங்குவது
தெரியலையா..?

மெல்லிய நூல் நுனி பற்றி..
நீ உயரப்பறக்கவிடும்..
வால் படபடக்கும்
பட்டத்தை
அண்ணாந்து அதிசயிக்க..
குழும வீதிகளில்
குழுமியிருக்கும்
அனேகரில்
அடியேனும் ஒருவன்...!

எம் பிரார்த்தனைகளில்
வலுக்கூடும்
சிறகுகள் சிலுப்பி..
சீக்கிரமாய்..எழுந்து வா..
என் தமிழ் தோழா...
நாம் கட்டவேண்டியிருக்கிறது
ஒரு தமிழ்கூடு..!


    இக் கவிதையை எழுதிய இவர் ஒரு வலைப்பதிவராகத்தான் முதலில் எனக்கு அறிமுகமானார். வாழ்க்கை, ஒரு பயணத்தை ஒத்தது. அதுவரையில் ஒருவரோடு ஒருவர் உரையாடி, அளவளாவி, சிரித்து மகிழ்ந்து, அழுது, கண்ணீரைப் பரிமாறிக் கலந்திருப்பவர்கள் அவரவர் இறங்குமிடம் வருகையில்,  இறங்கிக்கொள்ள வேண்டியிருக்கிறது. இறங்கிச் செல்பவரை நோக்கி நாம் பிரிதலின் துயரத்தோடு கையசைத்து வழியனுப்ப வேண்டியிருக்கிறது. எமக்கான இறங்குமிடம் எதுவென்றே அறியாமல் அது வரும்வரையில் காத்திருக்க வேண்டியிருக்கிறது.

    அதுபோல  பிரவாகமெனப் பெருக்கெடுத்த ஒரு நதி, ஓர் நாளில் மிகவும் அந்தகாரமான சூழலொன்றை என் இருப்புக்குள் தள்ளிவிட்டுக் காணாமல் போய்விட்டிருக்கிறது. உபவாச நாட்களின் இறுதிப்பகுதியில், எல்லாச் சுய புலன்களையும் அடக்கியாளும் வல்லமையை ஓரளவு பெற்றிருந்தும், அவரை இழந்த செய்தியறிந்த பிறகு, தானாக வழியத் தொடங்கிய கண்ணீரை கட்டுப்படுத்தத் தெரிந்திருக்கவில்லை.

    மிகுந்த தன்னம்பிக்கையளிக்கும் உரையாடல்கள் அவருடையனவாக இருந்தன. ஒவ்வொரு உரையாடலிலும் உரிமையோடு அறிவுறுத்தும் அன்புக்குரியவராக அவர் இருந்தார். இருவருமே நேரில் பார்த்துக்கொண்டதில்லை. இணையம் மூலமான பரிச்சயம் மாத்திரமே எனினும், நேரில் கடந்துசெல்பவர்களை விடவும் பாசத்துக்குரியவராக அவர் இருந்திருக்கிறார். எழுத்து, திரைப்பட இயக்கம், நூல் வெளியீடு ஆகியன நாற்பத்து மூன்று வயதுக்குள் அவருக்கு வசப்பட்டிருந்தன. அவர் வெங்கட் தாயுமானவன்.

    இறப்பு, மீளச் சுருட்ட முடியாத ஒரு மாயப் போர்வையை ஒத்தது. அது சம்பந்தப்பட்டவரை தன் பரப்பால் எளிதாக மூடிக் கொள்கிறது. அது போர்த்திய யாரையும் மீளவும் எழுப்பிவிடவும் முடியாது. உள்ளே என்ன இருக்கிறதென்று பார்த்துவரவும் முடியாது.

    'இலங்கைக்கு எப்பொழுது செல்வாய்? நான் உன்னைப் பார்க்க வருவேன் ரிஷான்'
   
    'இலங்கை முழுதும் உன்னுடன் சுற்றிப் பார்க்க வேண்டும். விரைவில் இது நடக்கும்'

    எமது ஒவ்வொரு உரையாடலின் போதும் தவறாமல் அவர் சொல்லும் வார்த்தைகள் இவை. நான் இலங்கை வந்துவிட்டேன். வீடேகி விட்டேன். என்னுடன் இலங்கை முழுதும் சுற்றிப்பார்க்கும் ஆவல் கொண்ட எனது அன்பு நண்பரைத்தான் காணவில்லை.

    இணையம் மூலமாக தின நலம் விசாரிப்புக்களோடு, வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நாட்களில், கைத் தொலைபேசிக் குறுந்தகவல்களும் அவரது அன்பைச் சொல்லின. இதை எழுதும் இக் கணத்தில் எனது வார்த்தைகளை மதித்து, என் சார்பாக அவரை நேரில் சென்று சந்தித்து, பல உதவிகளைச் செய்த பதிவுலக நண்பர்கள் அப்துல்லாஹ்வையும், ஷேக் தாவூத்தையும் நன்றியோடு நினைவு கூறுகிறேன்.

    வாழ்வு குறித்தான பல நம்பிக்கையூட்டும் பாடல்கள் அவர் வசமிருந்தன. எல்லாப் பாடல்களினதும் இசைப்பிண்ணனியாக அவரது தன்னம்பிக்கை இருந்தது. ஒரு பெரும் நீர்வீழ்ச்சி போல சுற்றிவர இருக்கும் எல்லாச் சோலைகளுக்கும் ஈரச் சாறல் தெளித்து, செழிப்பாக முளைக்கச் செய்யும்படி வீழ்ந்து, நதியாக ஓடி, பெரும்பரப்பொன்றுக்குள் கலந்துவிட்டிருக்கிறது ஒரு நல்ல ஆன்மா.

    இன்னும் எத்தனையோ சாதனைகளை எட்டிப் பிடித்துவிட வேண்டுமென்ற ஆவலையும் நம்பிக்கையையும் அவர் கொண்டிருந்தார். எல்லாவற்றையும் கரையானைப் போல அழித்துச் சிதைத்தது புற்று. திரும்பும் பரப்பெங்கும் எட்டி வைக்கும் எனது ஒவ்வொரு நடையிலும் அவரும் அருகிலிருந்தால் நன்றாக இருந்திருக்குமே என எண்ணங்கள் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. அதுபோலவே எழுதித் தீராத சொற்களைக் கொண்டு அவரைப் பற்றி எழுத நிறைய இருக்கின்றது. எழுதத்தான் தெரியவில்லை எனக்கு.

தூறல் மழைக்காலம்


குளிர் காற்றினூடான வானம்
இளநீலம்

மெல்லிய நீர்த்துளிகள்
இசை சேர்த்து வந்து
மேனி முழுதும் தெளிக்கின்றன
நீண்ட காலங்களாக
சேகரித்து வைத்த அன்பை

அமானுஷ்ய ஈரத்தோடு
தளிர் விட்டிருக்கும் அகத்தி
பெண் நெற்றிப் பொட்டு வடிவ
பச்சை நீளிலை மரத்தில்
ஊதாப்பூக் காய்கள் கொத்தியுண்ணும்
ஏழெட்டுக் கிளிகள்
செந்நிறச் சொண்டுகளுடன்
மாதுளம்பூக்கள்

தனிமையை அணைத்தபடி
அடுத்த பாடலை
நான் ஆரம்பிக்கலாம்
அதன் பிண்ணனியில்
மழையும்
நதியின் ஈரலிப்பும்
குளிரின் வாசனையும்
இதே பசுமையும் என்றுமிருக்கும்

நீயும்
என்னுடன் இருந்திருக்கலாம்

- எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை

Friday, January 8, 2010

ஈழம் மற்றும் அரசியல்



ஈழம்

ஒவ்வொரு துகளும்
செஞ்சாயம் பூசிக்கொள்ளக்
கடுங்குருதி நில மணலில் ஊர்ந்துறைகிறது

இடையறாப் பேரதிர்வு
நிசப்தங்கள் விழுங்கிடப்
பேச்சற்று மூச்சற்று
நாவுகள் அடங்குகையில்
விழித்தெழாப் பாடலொன்றைக்
கண்டங்கள் தோறும் இசைத்தபடி
அநீதங்கள் நிறைந்த
வாழ்வின் கொடிபிடித்துப்
பேய்கள் உலாவருகின்றன

இருக்கட்டும்
புத்தர் உறங்கும் விகாரைக்கு நீ
வெண்ணலறிப் பூக்களொடி

*
அரசியல்

வண்ணத்துப்பூச்சியொன்றின்
ஒரு இறகில் நீயும்
மறு இறகில் நானும் ஏறிக் கொண்டு
உலகம் முழுதும் சுற்றிப்பார்ப்போம்

நான் ஆளும் தேசம் பற்றிய
பஞ்சப்பாட்டுக்களைத் தவிர்த்து
என் பற்றிச் சிலாகித்துப்பாடு
அது நான் செய்யாததாக இருப்பினும்
நிறைந்த நற்செயல்களாலும்
அருள்மிகுந்த கீர்த்திகளாலும் -எனது
நீண்ட ஆயுளுக்கான பிரார்த்தனைகளாலும்
ஆனதாக இருக்கட்டும்

காலம் காலமாகப் பிரிந்தே பயணித்த
இரு சமாந்தரத் தண்டவாளங்களை
சூடாகித் தெறித்துப் பின் காய்ந்து போன
சிவப்புவர்ணத்தைப் பூசி இணைத்தது
தலையற்ற முண்டமொன்று
அது பற்றி உனக்கென்ன கவலை?
வா

வண்ணத்துப்பூச்சி வேண்டாம்
தும்பிக்கு நான்கு சிறகுகளாம்

அதன்
ஒரு இறகில் நீயும்
மறு இறகில் நானும்
மற்ற இரண்டில்
எதிர்த்துக் கேள்விகளெதுவும் கேட்கவிழையாத
மேலுமிரு அப்பாவிக் குடிமகன்களையுமேற்றி
என் புகழ் பாடியபடி
உலகம் முழுதும் சுற்றிப்பார்ப்போம்

- எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை.

நன்றி
# உன்னதம் இதழ் - டிசம்பர், 2009
# உயிர்மை


Thursday, January 7, 2010

அமிலப் பெண்கள் (இளகிய மனமுடையவர்கள் இப் பதிவைத் தவிர்க்கவும் )

போரிலும் பகையிலும் முதல் பொருளாய்
அவளையே சூறையாடினாய்:
அவளுக்கே துயரிழைத்தாய் ;
உன்னால் அனாதைகளாக்கப் பட்ட
குழந்தைகளையெல்லாம் அவளிடமே ஒப்படைத்தாய்:
தலைவனாகவும் தேவனாகவும் நீ
தலை நிமிர்ந்து நடந்தாய்

(கவிஞர் ஃபஹீமாஜஹானின் 'ஒரு கடல் நீரூற்றி' தொகுப்பிலிருந்து)

               பல பத்திகளில் எழுத வேண்டியவற்றை, கவிஞரின் மேற்சொன்ன வரிகள் எளிதாகவும், விரிவாகவும், வெளிப்படையாகவும் விளக்குகிறது. போர்களிலும், பகைகளிலும், பல குடும்பங்களிலும் பெண்களின் நிலைமை மிகவும் பரிதாபத்துக்குரியது. ஒவ்வொரு இடத்திலும் அவள் அத்திவாரமாக விளங்குவதாலோ என்னவோ, எதிரிகள் அவளையே சிதைக்கிறார்கள். எள்ளி நகையாடுகிறார்கள். காவலற்றுப் போன அகிம்சை விலங்கென, வேட்டையாடுகிறார்கள். எல்லாம் செய்யும் ஆண், தப்பித்துவிடுகிறான். சிலவேளை சிறிய தண்டனை அல்லது பொது மன்னிப்பு. பெண், காலங்காலமாக தன் வாழ்வின் இறுதிக் கணம் வரை ரணம் சுமக்க வேண்டியவளாகிறாள்.

             இனி, படங்களைப் பார்ப்போம். இப் படங்கள் உங்களை அதிரச் செய்யும். இப்படியுமா கொடூரங்களென வியக்கவும் செய்யும். பாதிக்கப்பட்டவர்களுக்காக மனமுருகவும் செய்யும். அவர்களின் துயருணர்ந்து, இது போல எவருக்குமே நிகழக் கூடாதெனப் பிரார்த்தியுங்கள். நீங்கள் அறிந்தவர்கள் எவரேனும் இவ்வாறான கொடூரங்களை நிகழ்த்த முற்பட்டால், தடுங்கள். பாதிக்கப்படப் போவது ஒரு உயிர். ஒரு முழு மனித வாழ்க்கை.

                  இப் படங்களில் இருப்பவர்கள், வன்னமில (Acid) வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்கள். இச் சாகசத்தைச் செய்தவர்கள் ஆண்கள். பாகிஸ்தான் நாட்டில் இவை பிரச்சினைகளை முடிவுக்குக் கொண்டுவரும் யுக்தி அல்லது பழிக்குப் பழி.





# இரம் சயீத் (வயது 30) - 12 வருடங்களுக்கு முன்னர், இவர் திருமணம் செய்ய மறுத்த இளைஞனால், நடு வீதியில் வைத்து, அமில வீச்சுக்கு உள்ளாகி முகம், தோள், பின்புறமென முழுவதுமாகப் பாதிக்கப்பட்டார். இவரைக் காப்பாற்ற, இருபத்தைந்து ப்ளாஸ்டிக் சத்திரசிகிச்சைகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.
___________________________________________




# ஷமீம் அக்தர் (வயது 18) - இவரது 15 வயதில், மூவர் இவரைப் பாலியல் வல்லுறவுக்குட்படுத்திப் பின்னர் அமிலத்தை இவர் மீது எறிந்து தப்பித்தனர். இதுவரையில் பத்து ப்ளாஸ்டிக் சத்திர சிகிச்சைகளுக்குள்ளாகியுள்ளார்.
_________________________________________



# நஜாஃப் சுல்தானா (வயது 16) - பெண் குழந்தை வேண்டாமென்று கருதிய இவரது தந்தை, இவரது ஐந்து வயதில் இவரை எரித்துவிட்டார். இதன் காரணமாக முழுமையாகப் பார்வையிழந்த இவரை பெற்றோரும் கைவிட்டு விட, தற்பொழுது உறவினர்களிடம் தஞ்சமடைந்துள்ளார். பதினைந்து தடவைக்கும் மேலாக சத்திர சிகிச்சைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார்.
______________________________________




# ஷெஹ்னாஸ் உஸ்மான் (வயது 36) - ஐந்து வருடங்களுக்கு முன்பு குடும்பப் பிரச்சினையொன்றின் போது, இவரது உறவினரால் அமில வீச்சுக்குள்ளானார். நிவாரணம் பெறவேண்டி இதுவரை பத்து சத்திர சிகிச்சைகளுக்குள்ளாகியுள்ளார்.
______________________________________




# ஷானாஸ் பீபி (வயது 35) - பத்து வருடங்களுக்கு முன்னர் குடும்பப் பிரச்சினையொன்றின் போது உறவினரொருவரால் அமில வீச்சுக்குள்ளான இவர் எந்தவொரு சிகிச்சைகளுக்கும் இன்றுவரை உட்படுத்தப்படவில்லை.
_______________________________________



# கன்வால் கையூம் (வயது 26) - ஒரு வருடத்திற்கு முன்னர், இவர் திருமணம் செய்ய மறுத்த இளைஞனால் அமில வீச்சுக்குள்ளானார். இவருக்கு இதுவரை எந்த சிகிச்சையும் மேற்கொள்ளப்படவில்லை.
_______________________________________




# முனீரா ஆசிப் (வயது 23) - ஐந்து வருடங்களுக்கு முன்னர், இவர் திருமணம் செய்ய மறுத்த இளைஞனால் அமில வீச்சுக்குள்ளானார். இதுவரை ஏழு சத்திர சிகிச்சைகளுக்காகியுள்ளார்.
_____________________________________



# புஷ்ரா ஷாரி (வயது 39) - தனக்குப் பிடிக்காத கணவரை விவாகரத்துச் செய்ய முற்பட்டபோது, அவரால் அமில வீச்சுக்காளான இவர், இதுவரை இருபத்தைந்து சத்திர சிகிச்சைகளுக்காளாகியுள்ளார்.
_________________________________________



# மைமூனா கான் (வயது 21) - குடும்பத் தகராறொன்றின் போது ஒரு இளைஞர் குழுவினால் அமில வீச்சுக்குள்ளானார். இதுவரை இருபத்தியொரு சத்திர சிகிச்சைகளுக்குள்ளாகியுள்ளார்.
__________________________________________



# ஸைனப் பீபி (வயது 17) - ஐந்து வருடங்களுக்கு முன்னர், இவர் திருமணம் செய்ய மறுத்த இளைஞனால் அமில வீச்சுக்குள்ளானார். இதுவரை பல சத்திர சிகிச்சைகளுக்காகியுள்ளார்.
 _____________________________________



நைலா ஃபர்ஹத் (வயது 19) - ஐந்து வருடங்களுக்கு முன்னர், இவர் திருமணம் செய்ய மறுத்த இளைஞனால் அமில வீச்சுக்குள்ளானார். இதுவரை ஏழு சத்திர சிகிச்சைகளுக்காகியுள்ளார்.
 ______________________________________



ஸாய்ரா லியாகத் (வயது 26) - பதினைந்து வயதில் திருமணமான இவர், படிப்பைத் தொடர வேண்டுமென விரும்பியதால் தனது கணவராலேயே அமில வீச்சுக்குள்ளானார். இதுவரை ஒன்பது முறை சத்திர சிகிச்சைகளுக்காளாகியுள்ள இவர், கையில் வைத்திருப்பது பழைய புகைப்படம்.

              இது போலவும், இன்னும் பல விதங்களில் பாதிக்கப்பட்ட பெண்களும் பாகிஸ்தானில் மட்டுமல்ல. எல்லா தேசங்களிலும்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.

              போகப் பொருளாகவும், விளம்பரங்களுக்கும், அங்கங்களை வர்ணிக்கவும் பயன்படும் பெண்கள் மட்டுமல்ல. இவ்வாறாக பாதிப்புற்ற பெண்களும் நம் மத்தியில் உலவிக் கொண்டுதானிருக்கிறார்கள்.

             இவர்களுக்காகவும் நம் ஊடகங்களும், மக்களும் குரலெழுப்ப வேண்டும். பூமியெங்கும் நடை பாதை, சுவாசிக்கத் தென்றல், அருந்த நீர் - வாழும் உரிமை அவர்களுக்கும் இருக்கிறது !

- எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை



Wednesday, January 6, 2010

தூண்டில்



       நித்தியின் வேலைகளில் எப்பொழுதுமொரு அவசரமிருக்கும். அவன் எங்களை விடவும் இளையவன். இங்கு எங்களை என்று சொன்னது என்னையும் சின்னுவையும் சேர்த்துத்தான். நித்திக்கு அப்பொழுது பத்து, பதினோரு வயதிருக்கும். எங்களூரின் வண்ணான்காரத் தெருப்பையன். கறுத்துப் போய், துறுதுறுவென இருப்பான். பேச்சும்கூட அப்படித்தான். எனக்கும் சின்னுவுக்கும் ஒரே வயது. அந்தப் பதினாறு வயதுக்கு நான் படிப்பைப் பாதியில் விட்டு எனது அப்பாவின் கடையில் அண்ணனுடன் சேர்ந்து அவருக்கு உதவியாக வேலை செய்துகொண்டிருந்தேன். சின்னுவுக்குக் குறையேதுமில்லை. வசதியான வீட்டுப் பையன். பத்தாம் வகுப்புப் பரீட்சை எழுதிவிட்டு என்னுடன் சேர்ந்து மாலைவேளைகளில் ஊர் சுற்றிக் கொண்டிருந்தான்.

        சின்னுவும் என் வீட்டிலிருந்த நேரம், கழுவித் தோய்த்த துணிகளை என் வீட்டுக்குக் கொண்டு தர வந்திருந்த நித்திதான் எங்களிருவரையும் தனியே அழைத்து மிக ரகசியமாக அந்த யோசனையை முதலில் சொன்னான். அவர்கள் துணி துவைக்கும் குளத்துக்கருகில் இன்னுமொரு சிறு குளம் இருப்பதாகவும் அதில் பெரிய பெரிய விரால் மீன்கள் நிறையப் பிடித்துவரலாம் என்றும் அவனோடு வரும்படியும் சொன்னான். 'நீர் மட்டம் கெண்டைக்கால் அளவுதான் இருக்கும், வலை, தூண்டில் எதுவும் தேவையில்லை, மீன்களைக் கைகளாலேயே பிடிக்கலாம்' என அவன் சொன்னபோதே சுதாகரித்திருக்க வேண்டாமோ? அதைச் செய்யத் தவறிவிட்டோம். சரியென நாங்கள் இருவரும் மீன் பிடித்துவர அவனுடன் கிளம்பிவிட்டோம். இது நடக்கும்போது காலை ஆறுமணி இருக்கும். ஒரு மணித்தியாலத்துக்குள் மீன்களைப் பிடித்து எடுத்துவந்து வீட்டில் கொடுத்துவிட்டு, குளித்துக் கடைக்கு எட்டுமணிக்குக்  கிளம்பச் சரியாக இருக்குமெனத் திட்டமிட்டுக்கொண்டேன். கடற்கரைக்குப் போய் மீன் வாங்கிவருவதாக வீட்டில் சொல்லிவிட்டு நடந்தோம்.

        இங்கு நித்தியைப் பற்றிச் சொல்லவேண்டும். கொக்கரித்துக் கொண்டே முட்டை அடைகாக்கும் பெட்டைக் கோழி போல நித்தியின் அம்மா எப்பொழுதும் யாருடனாவது சண்டை போட்டுக் கொண்டே இருப்பார். சண்டை போடாவிட்டால் அவருக்கு உண்ட சோறு செரிக்காது, நிம்மதியாகத் தூக்கம் வராது என நினைக்கிறேன். நித்தியின் அப்பாவும் அம்மாவும் பொழுதுபோக்கு போல எப்பொழுதும் சண்டை போட்டுக் கொண்டே இருப்பதனால் இருவரும் சேர்ந்து ஒற்றுமையாக ஒன்றாக எங்காவது செல்வதைக் காண்பின் உலக அதிசயத்தைப் பார்ப்பதுபோல ஊர்மக்கள் பார்த்திருப்பர். ஊருக்குள் நித்தியைப் பற்றி ஒரு கதை உண்டு.

        ஒரு முறை நித்தியின் அப்பா, காலையிலேயே அம்மாவுடன் சண்டைபோட்டுக் கொண்டு, ஐந்து வயதான நித்தியையும் கூட்டிக் கொண்டு அருகிலிருந்த காட்டுக்கு விறகு தேடி எடுத்துவரப் போயிருக்கிறார். காட்டுக்குள் போகும் வழியிலெல்லாம் ஒவ்வொன்றையும் காட்டிக் காட்டி 'அது என்ன?' ,'இது என்ன?' என்று அப்பாவைக் கேட்டுக் கொண்டே வந்திருக்கிறான் நித்தி. அப்பாவும் சளைக்காமல் பதில் சொல்லிக் கொண்டே காட்டு மரங்களையும் சுள்ளிகளையும் சேகரித்துக் கொண்டுவந்து ஆற்றங்கரையோரம் அடுக்கிவைத்திருக்கிறார். வேலைக் களைப்பும் வெயிலும் அவருக்குள் எரிச்சலை மூட்டியிருக்க விறகுகளை அடுக்கிவிட்டு நித்தியை அந்த விறகுகளுக்குக் காவல் வைத்துவிட்டு அவர் திரும்பவும் காட்டுக்குள் போகப்பார்க்கையில்,

    'அப்பா இது என்ன?' என்று கேட்டிருக்கிறான் நித்தி ஆற்றைக் காட்டி.

    ' இது ஆறு'

    'இந்தத் தண்ணியெல்லாம் எங்க போகுது?'

    'ம்ம்..உன் அம்மாவோட வீட்டுக்குப் போகுது..வேலையைப் பார்க்க விடுறியா?' என்று எரிந்து விழுந்துவிட்டு அவர் காட்டுக்குள் போயிருக்கிறார்.

    அப்பா திரும்பி வந்து பார்க்க ஒரு விறகுத் துண்டையும் காணவில்லை. நித்தி மட்டும் நின்று கொண்டிருந்திருக்கிறான்.

    'எங்கேயடா விறகெல்லாம்?'

    'அம்மா இந்நேரம் எடுத்திருப்பா. இந்தத் தண்ணியெல்லாம் வீட்டுக்குத்தானே போகுது. அதனால எல்லாத்தையும் தண்ணிக்குள்ள போட்டுட்டேன்' என்றானாம்.

        அப்படிப்பட்ட நித்தி சொன்ன சிறிய குளம் ஊரைவிட்டும் சற்றுத்தள்ளி சிறிது தொலைவில் இருந்தது. மக்கள் அவசரத்துக்கு ஒதுங்குமிடம் போல இருந்த முற்காட்டுக்கு நடுவே இருந்தது. சுற்றிவரச் சாக்கடையோடு கோழி முட்டை வடிவத்தில் பரந்திருந்த அதில் பெரிய விரால் மீன்கள் நீந்துவது கரையிலிருந்தே தெரிந்ததுதான். ஆனால் நீர்மட்டம்தான் அதிகம். முழங்கால் வரையாவது இருக்கும். நீர்ப்பரப்பும் அகன்றது. அதற்குள் இறங்கி கைகளால் மீன்பிடிப்பது சாத்தியமில்லை என்பது நீருக்குள் இறங்கிய பின்னர்தான் தெரிந்தது. தெளிந்த நீர்தான். ஆனால் கால்வைத்தவுடன் சேற்றுக்குள் புதைந்து, முற்றாகக் கலங்கியது நீர். முழங்கால் வரை மடித்துக் கட்டியிருந்த வெள்ளைச் சாறனில் சேற்று நிறம் படியத் தொடங்கியது.

        சட்டைகளைக் கழற்றி கரைக்கு எறிந்துவிட்டு, நீண்ட நேரமாக அந்த நாற்றம் பிடித்த அழுக்கு நீருக்குள் நீந்தி நீந்தி மீன்களைக் கைகளால் பிடிக்கமுயற்சித்தோம். அவை எங்களுக்குப் போக்குக் காட்டி ஏமாற்றிக் கொண்டே இருந்தன. மீண்டும் நித்திதான் இன்னுமொரு யோசனையைச் சொன்னான். தண்ணீரையெல்லாம் கரைக்கு இரைத்து வற்றச் செய்தால் நீர் மட்டம் குறைந்து இலகுவாக மீன்களைப் பிடிக்கலாம் எனச் சொல்லியபடியே கரைக்கு ஏறி குளத்துக்கு அருகிலிருந்த ஒரு வீட்டில் போய் வாளிகள் இரண்டை வாங்கிவந்தான். அதிலொன்று ஓட்டை. 'மீனும் வேண்டாம், ஒரு மண்ணும் வேண்டாம்' என நான் வீட்டுக்குப் போயிருக்கவேண்டும். மீண்டும் அதைச் செய்யத் தவறிவிட்டேன்.

        மூவருமாக நீண்ட நேரத்துக்கு நீரை இரைத்துப் பார்த்தோம். அகன்ற குளத்தில் நீர் மட்டம் குறைவதாக இல்லை. கடும் வெயில் வேறு ஏறத் தொடங்கியிருந்தது. மூவருக்கும் பசியும், களைப்பும் வேறு. 'சரி..இன்னுமொரு நாளுக்குப் பார்ப்போம். இப்பொழுது வீட்டுக்குப் போவோம்' என நான் சொன்னதை சின்னு ஏற்றுக்கொள்ளவில்லை. முன் வைத்த காலை, பின் வைத்த மீனை எனப் பழமொழிகளெல்லாம் சொல்லி அடுத்த முயற்சி பற்றி யோசிக்கத் தொடங்கினான். இம் முறை நித்தி எதுவும் சொல்லவில்லை. ஆனால் ஏதோ கொடிய மிருகமொன்று அவனைத் துரத்துவது போல தண்ணீருக்குள்ளிருந்து எழுந்து கரைக்கு ஓடினான். பின்னர் அப்படியே ஈரத்தோடு அவனது வீடிருந்த திசையில் ஓடினான். நாங்கள் இருவரும் செய்வதறியாது தண்ணீருக்குள் நின்று பார்த்திருந்தோம்.

        சொற்ப நேரத்தில் அவன் மூச்சிறைக்க ஓடி வந்தான். இப்பொழுது அவனது கைகளில் ஒரு சேலை இருந்தது. அதன் ஒரு முனையின் இரு மூலைகளை விரித்து எனக்குப் பிடித்துக் கொள்ளச் சொல்லிவிட்டு, மறு முனையின் இரு மூலைகளையும் அவன் பிடித்துக் கொண்டான். அச் சேலையை நீருக்குள் போட்டு உயர்த்தும்பொழுது சேற்று நீர் அதனூடாக வடிந்து, சேறு மட்டும் திட்டுத்திட்டாய் சேலையில் எஞ்சியது. தண்ணீருக்குள் நாங்கள் சேலையை விரித்துப் பிடித்துக் கொண்டு சின்னுவை அதை நோக்கி மீன்களை விரட்டும்படி ஏவினோம். அவனும் மாடு மேய்ப்பவன் போலச் சத்தமிட்டுக்கொண்டே தண்ணீருக்குள் அதிர்வுகளைக் கிளப்பி விரட்டிக் கொண்டிருந்தான். இருந்த எல்லாச் சோர்வும், பிடித்த முதல் மீனோடு போயிற்று. அது ஒரு அடி நீளமான பெரிய மீன். பல மணித்தியாலச் சிரமத்திற்குப் பிறகு பல மீன்களைப் பிடித்திருந்தோம்.

        எல்லா மீன்களுமே அங்கிருந்த அழுக்குகளைத் தின்று செழித்து வளர்ந்திருந்தன. மீன்களைப் பிடித்து முடித்து கரைக்கு வந்து அவற்றை மூவரும் சமமாகப் பங்கிட்டுக் கொண்டோம். ஒற்றைப்படையாக எஞ்சியிருந்த சின்ன மீனொன்றை நித்திக்குக் கொடுத்துவிட்டோம். அவன் மீன்களையெல்லாம் தான் கொண்டுவந்த சேலையில் சுற்றியபடி, வாளிகளோடு ஈரம் சொட்டச் சொட்டத் தன் வீட்டுக்குப் போய்விட்டான். எங்களிருவருக்கும்தான் பெரும் சிக்கலொன்றிருந்தது. உடுத்து வந்திருந்த வெள்ளை சாரன்கள் ஈரமாகி, திட்டுத் திட்டாய் சேறு படிந்திருந்தது. அப்படியே வீதிவழியே போக வேண்டியிருக்கும். அத்துடன் மீன்களை எடுத்துப் போக எதுவுமில்லை எங்களிடம். வேறு வழியின்றி கரையில் கழற்றிப் போட்டிருந்த எங்கள் பனியன்களால் உடலையும், தலையையும் இயன்றவரை துடைத்துப் பின் அவற்றிலேயே அம் மீன்களைச் சுற்றியெடுத்து, சட்டையை மட்டும் போட்டுக் கொண்டு காண்போரெல்லாம் விசித்திரமாகப் பார்க்க எங்கள் வீடுகளுக்கு நடக்கத் தொடங்கினோம்.

        போகும் வழியில் நித்தியின் வீட்டைக் கடக்கும்போது அந்த வீட்டிலிருந்து நித்தியின் கதறல் வெளியே கேட்டது. அவனது அம்மா அவனுக்கு ஒரு புளியமர விளாறால் அடித்துத் துவைத்துக் கொண்டிருந்தார். சலவைக்காரி என்பதால் அடிப்பதுவும் துவைப்பது போலத்தான் இருந்திருக்கும். அவனது தங்கை வாசலில் நின்றுகொண்டு மூக்கு வழிய வழிய சத்தமாக அழுதுகொண்டிருந்தது. மீன்கள் சுற்றப்பட்ட சேலை அப்படியே மீன்களோடு வெளியே வீசப்பட்டுக் கிடந்தது. ஒரு கணம் நின்று பார்த்ததில் சலவைக்கு வந்திருந்த புதுச் சேலையொன்றை நித்தி மீன்பிடிக்க எடுத்து வந்திருந்தது புரிந்தது. அங்கிருந்தால் நமக்கும் அடிவிழுமென ஓட்டமும் நடையுமாக வீட்டுக்கு நடந்தோம். நேரம் மதியப் பொழுதைக் கடந்திருந்தது. அங்கிருந்து முதல் சந்தி தாண்டினால் பூரணம் அக்கா வீடு.

        எங்கள் ஊருக்கு முதன்முதல் போலிஸ் வந்தது பூரணம் அக்கா வீட்டுக்குத்தான் என அம்மா சொல்லியிருக்கிறார். அப்பொழுது எனக்கு மூன்று வயதிருக்குமாம். ஒரு காலைப் பொழுதில் ஊருக்குப் புதிதாக வந்திருந்த பூரணம் அக்காவையும் அவரது கணவரையும் கைது செய்யவெனப் போலிஸ் வந்து ஜீப்போடு அவர்கள் வீட்டு வாசலில் நின்றிருந்ததாம். ஊர் மக்களெல்லாம் திரண்டுபோய் ஒரு வித பயத்தோடு காக்கிச் சட்டைக்காரர்களையும், ஜீப் வண்டியையும், ஒப்பாரியோடு பயந்து அழும் பூரணம் அக்காவையும் பார்த்திருந்தார்களாம். பூரணம் அக்காவுக்கு மேல் உதடு மூக்குவரை பிளந்திருக்கும். இரு உதடுகளையும் மூடிப் புன்னகைப்பது அவரால் இயலாது. பேச்சும் கொன்னையாக இருக்கும். 'சாப்பிட வா' என்பதனை 'ஞாந்நின வா' என்பார். அவருடன் பல ஆண்டுகளாகப் பேசிப் பழகியவர்களுக்கே அவரது மொழியைப் புரிந்துகொள்ளல் இலகு. ஆனால் எப்பொழுதும் சிரித்த முகம். அன்று அழுதபடியே இருந்தாராம். அவரது கணவன் அநியாயத்துக்கு ஒல்லியான மனிதன். உயர்ந்து வளர்ந்தவருக்கு ஒரு காலில் ஊனம். முழங்காலை ஒரு கையால் தாங்கித் தாங்கி நடப்பார். மிகக் கம்பீரமான குரல் அவருடையதாக இருந்தது. ஒரு அரசாங்க அலுவலகத்தில் ஏதோ வேலை பார்த்து வந்தார்.

        அவர்களிருவருக்கும் ஒரு பெண் குழந்தை இருந்தது. அப்பொழுது அதற்கு ஒரு வயதுதான் இருக்கும். அவர்களிருவரும் எங்கள் ஊருக்கு வரும்போது அவர்களுடன் கூடவே வந்த அந்தக் குழந்தை அவர்களுடையதல்ல என்றும், அவர்கள் அதைக் கடத்திக் கொண்டுவந்திருப்பதாகவும் போலிஸ் சந்தேகித்து வாசலில் வந்து நின்றிருந்தது. அந்தக் குழந்தை அவ்வளவு அழகு. நல்ல சிவப்பு நிறம். அழகிய சுருண்ட தலைமயிர். அவர்களிருவரது சாயலும் அதனிடம் கிஞ்சித்தேனும் இல்லை. அப்படியே அழகிய குழந்தை பொம்மையொன்றுக்கு உயிர் கொடுத்து நடமாடவிட்டதைப் போல அழகுக் குழந்தை அது. அம் மூவரையும் அள்ளிப் போட்டுக்கொண்டு காவல் நிலையத்துக்கு ஜீப்பில் கூட்டிப் போனார்கள். மாலை பஸ்ஸில் அம் மூவரும் சந்தோஷத்தோடு திரும்பி வந்தார்கள். பஸ்ஸிலிருந்து இறங்கி ஊருக்குள் நடந்துவந்த வழியெங்கும் பூரணம் அக்கா அந்தக் குழந்தையைக் கொஞ்சிக் கொண்டே வந்தார். பூரணம் அக்காவின் கணவருக்குப் பிடிக்காத எவனோ ஒருவன் போலிஸுக்கு தவறான தகவல் வழங்கியிருக்கிறான் என்றார்கள்.

        இப்பொழுது பிரச்சினை என்னவென்றால் நாங்களிருவரும் உடுத்துப் போன வெள்ளைச் சாறன், வெள்ளைச் சட்டை முழுக்க நாற்றம் பிடித்த சேறு அப்பியிருக்க இந்த அசிங்கமான நிலையில் மீன்களைத் தூக்கிக்கொண்டு பூரணம் அக்கா வீட்டினைத் தாண்டிச் செல்லவேண்டும். எப்பொழுதும் வீட்டுத் திண்ணையில் அமர்ந்து தைத்துக் கொண்டிருக்கும் பூரணம் அக்காவின் கண்களில் ஒன்று தைக்கும் புடைவையில் இருக்கும், மற்றது தெருவில் இருக்கும். அவர் கண்டால் கூடப் பரவாயில்லை. அவரது அழகு மகள் கலைச்செல்வி பார்த்துவிட்டால் எங்களைப் பற்றி என்ன நினைப்பாள்? காலையும், மாலையும், இன்னும் நேரம் கிடைக்கும்போதெல்லாம் அவள் பள்ளிக்கு, வகுப்புகளுக்கு போகும்போதும் வரும்போதும் சைக்கிள்களில் பின்னாலேயே போய் காவல் காத்துத் திரியும் எங்கள் மேல் அவள் வைத்திருக்கும் மதிப்பும் மரியாதையும் (அப்படியொன்றிருந்தால்?! ) சரியும்தானே. அவள் எங்களைக் காணக் கூடாதென்று மனதுக்குள் வேண்டியபடி விறுவிறென்று நடந்தோம்.

        சின்னு வழியிலேயே அவன் வீட்டுக்குப் போய்விட்டான். நான் அவர்கள் வீட்டையும் தாண்டி இன்னும் ஒரு தெரு நடக்கவேண்டும். அந்தப் பின் மதிய வெயிலில் பலத்த பசியோடு வீட்டுக்குப் போய் பின்வாசல் வழியே நுழைந்தேன். எல்லோரும் சாப்பிட்டுத் தூக்கத்திலிருப்பார்கள் என்ற நம்பிக்கையோடு திருட்டுப் பூனை போல மெதுவாக பின்வாசல் கதவைத் திறந்தால் அம்மாவும், தங்கையும் தூங்காமல் அப்பொழுதுதான் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். 'நாற்றம் நாற்றம்... வெளியே போய்க் குளிச்சுக்கொண்டு வா சனியனே' எனச் சத்தம் போடத் தொடங்கினார்கள். நான் மீன்களைச் சமையலறையில் வைத்துவிட்டு எதுவும் பேசாமல் நல்லபிள்ளை போல கிணற்றடிக்குப் போய் இரண்டு வாளித் தண்ணீரள்ளி தலையிலிருந்து கால்வரை ஊற்றிக் கொண்டு, கொடியில் காய்ந்துகொண்டிருந்த கழுவிய ஆடைகளை அணிந்து உள்ளே வந்தேன். இல்லாவிட்டால் சாப்பாடு கிடைக்காது எனப் பயந்தேன். அம்மா சாப்பிட்டு முடித்து எனக்குச் சோறு போட்டுத் தந்தார். பின்னர் எழுந்துபோய் பனியனில் சுற்றியிருந்த அந்த மீன்களை கைபடாமல் ஒரு சிறு விறகுக்குச்சியால் திறந்து பார்த்தார். மிகவும் புளித்த மாங்காயை, கூசும் பற்களால் கடித்ததுபோல அறுவெறுப்போடு அஷ்டகோணலாகியது அவரது முகம். 'இதுதான் கடல் மீனா? உடல் முழுக்கச் சொரி பிடித்த மீன்கள். தூக்கியெறி இதை. இரு அப்பா வரட்டும். உனக்கு இருக்கு நல்லா' எனச் சத்தம் போட்டார்.

        சத்தம் கேட்டு உள்ளே உறங்கிக் கொண்டிருந்த அண்ணி எழுந்து வந்தார். தம்பி ஏன் இன்று கடைக்கு வரவில்லையென்று அண்ணா மதியச் சாப்பாட்டுக்கு வந்த வேளை கோபமாகக் கேட்டதாகச் சொன்னார். அவரும் போய் மீன்களைப் பார்த்து தன் பங்குக்கு முகத்தைச் சுழித்தார். அப்பாவும் அண்ணாவும் வந்தால் இன்று எனக்கு 'நல்ல' அறிவுரை கிடைக்குமென்பதை நினைத்து ஏதேதோ உளறிக் கொண்டிருந்தேன். மீன் வாங்கி வரக் கடற்கரைக்குத்தான் போனதாகவும், மீனே கிடைக்கவில்லையாதலால், குளத்துக்கு மீன் பிடிக்கப் போனதாகவும் நான் சொன்ன பொய்யை வீட்டில் யாரும் ஒரு கடுகளவு கூட நம்பவில்லை. மீன் விற்கும் கடற்கரையில் மீன் கிடைக்கவில்லை எனப் பொய் சொன்னவன் உலகிலேயே முதன்முதலாக நானாகத்தான் இருக்கும் எனத் தங்கை சொன்னாள்.

        சாப்பிட்டு முடித்து அம்மா தூக்கியெறியச் சொன்ன மீன்களை ஒவ்வொன்றாக எடுத்து ஒரு பையில் போட்டுக் கொண்டேன். எவ்வளவு கஷ்டப்பட்டுப் பிடித்த மீன்கள். இவற்றைத் தூக்கியெறிய முடியுமா? இனி இதனைக் கொண்டுபோய் சின்னுவுக்காவது கொடுக்கவேண்டும். அவன் எடுத்துப் போனவற்றோடு போட்டு இதையும் சமைக்கட்டும். நன்றாக உடுத்துக் கொண்டு வாசனையெல்லாம் பூசி, சைக்கிளை எடுத்துக் கொண்டு அவன் வீட்டுக்குப் போனால் அவன் ஒரு பையில் மீன்களைப் போட்டுக்கொண்டு எனது வீட்டுக்கு வரத் தயாராக நின்று கொண்டிருந்தான். அவன் வீட்டிலும் ஏற்கவில்லையாம். இனி மீன்களை நித்திக்கும் கொண்டுபோய்க் கொடுக்கவியலாது. சேலையைப் பாழாக்கி நாங்கள் செய்த மீன் கொலைகளுக்காக அவன் அம்மா அந்தச் சேலையைத் துவைப்பதுபோல எங்களையும் துவைத்துவிடக் கூடும். இருவரும் சைக்கிளைத் தள்ளிக் கொண்டு நடக்கத் தொடங்கினோம். அடுத்த தெருவில் ஒரு மெலிந்த சிறுவன் ஒரு டயரைக் குச்சியால் தள்ளியபடி வீதியில் விளையாடிக் கொண்டிருந்தான். அவனை யாரென்று தெரியவில்லை. நாங்களிருவரும் ஒருவரையொருவர் பார்த்து ஒரு முடிவுக்கு வந்தோம். அச் சிறுவனின் அருகில் போய் அவன் அப்பா தந்ததாகவும் அம்மாவிடம் கொடுத்துவிடும்படியும் சொல்லி, அம் மீன் நிரம்பிய பைகளை அவனிடம் கொடுத்து சைக்கிளில் ஏறிப் பறந்தோம்.

        இது நடந்து இரண்டு, மூன்று மாதங்களிருக்கும். எங்கள் கடை மூடப்பட்ட ஒரு விடுமுறை நாளில் சின்னு எனது வீட்டுக்கு வந்திருந்தான். நாங்கள் அந்த மாலைவேளையில் சைக்கிளை எடுத்துக் கொண்டு உலாத்தப்போனோம். அப்பொழுதுதான் எங்களூரில் வெற்றிலை பீடாக்கடை அறிமுகமாகியிருந்த காலமது. ஒரு பீடா போட்டால் உதடெல்லாம் சிவந்துபோய் ஏதோ சாதித்தது போல இரண்டு நாளைக்கு அப்படியே இருக்கும். பீடா சாப்பிட்டு, உதட்டைச் சிவக்கவைத்து, கலைச்செல்வியை நோட்டமிடப் போகலாம் என்ற யோசனையை பெருமையோடு சின்னுதான் சொன்னான். இப்பொழுதாவது நான் மறுத்திருக்கவேண்டாமா? சரியென பீடாக் கடைக்கு சைக்கிளை விட்டோம். பீடாக்களில் இரண்டு வகை இருக்கிறது. ஒன்று சாதாரண வெற்றிலைக்குள் பாக்குச் சீவல், இன்னுமேதேதோ இனிப்பு வைத்துச் சுற்றியது. இதைச் சாப்பிட்டால் வெறுமனே வாய் சிவக்கும். சுவையாக இருக்கும். மற்றது போதை தருவது. மடித்த வெற்றிலைக்குள் ஏதேதோ பொடிப்பொடியாக இட்டு நிரப்பி போதையை அள்ளித்தருவது. விலையும் கூடுதலானது. சத்தியமாக நாங்கள் இருவரும் சாதாரண பீடா இரண்டுக்குக் காசுகொடுத்து சாதாரண பீடாதான் கேட்டோம். எங்களது கெட்டநேரம் பீடா விற்பவன் அப்பொழுது பார்த்துத் தன் சின்ன மகனைக் கடையில் விட்டு வீட்டுக்குள் போயிருந்தான். அச் சிறுவன் ஏற்கெனவே சுற்றிவைத்திருந்த சுருள்கள் இரண்டை எங்களுக்கு எடுத்துத் தந்தான். அவை போதை தருவன என்பதனை சாப்பிட்ட பின்னர்தான் அறிந்தோம்.

        வெற்றிலை சாப்பிடும்பொழுது ஊறும் சிவப்பு எச்சிலை துப்பிவிடுவது எனது வழக்கம். விழுங்கிவிடுவது சின்னுவின் வழக்கம். அந்த பீடாவை வாய்க்குள் இட்டு மென்று, உதடு சிவக்க ஆரம்பித்த கணம் நாங்கள் கலைச்செல்வி வீட்டுத் தெருவில் சைக்கிளில் போய்க் கொண்டிருந்தோம். பூரணம் அக்கா, வழமை போலத் தைத்துக் கொண்டிருந்தார். கலைச்செல்வி, தன் வீட்டுக் கொடியில் காய்ந்துகொண்டிருந்த ஆடைகளை எடுத்துக் கொண்டிருந்தாள். அவர்களிருவரோடு, அவ் வீடும் திடீரெனத் தலைகீழாய்ச் சுழலத் தொடங்கியது. தெருவில் யாருமே இல்லை. சின்னு சைக்கிளோடு பாதையின் அங்குமிங்கும் போய் சரியாக பூரணம் அக்கா வீட்டு வேலிக்குள் போய்க் கவிழ்ந்து விழுந்தான். நானும் தலைசுற்றிப் போய் சைக்கிளோடு தெருவில் விழுந்தேன். பூரணம் அக்காவும் கலைச்செல்வியும் பதைபதைத்துப் போய் எழுந்து ஓடி வந்தார்கள்.

        எங்களைச் சிரமப்பட்டு அவர்களிருவரும் அவர்களது வீட்டுக்குக் கூட்டிப் போனதை உணரமுடிந்தது. கூட்டிக்கொண்டு போய் உட்காரவைத்து இருவரதும் வாய் வழியே வழிந்த சிவப்பு எச்சிலையெல்லாம் துடைத்துவிட்டார் அக்கா. எனக்குச் சற்றுத் தெளிவு இருந்தது. சின்னுவுக்கு கிஞ்சித்தேனும் தெளிவு இல்லை. ஆழ்ந்த தூக்கத்திலிருப்பவன் போல கண்மூடி சரிந்துகொண்டிருந்தான். பிறகு எங்களிருவரையும் கிணற்றடிக்கு அழைத்துச் சென்று சலவைக் கல் மேல் உட்காரவைத்து இருவரதும் சட்டையைக் கழற்றி ஒரு எலுமிச்சம் பழத்தைப் பாதியாக வெட்டி இருவர் தலையிலும் சூடு பறக்கத் தேய்த்து வாளிவாளியாக நீரள்ளி ஊற்றினார் அக்கா. சின்னப் பையன்களை ஏமாற்றி போதைக்குப் பழக்குவதாக அந்த பீடாக்காரனைத் தனது கொன்னை மொழியால் திட்டியபடியே தலை துவட்டியும் விட்டார். சிறு குழந்தைகள் கையில் வைத்து ஆட்டும் கிலுகிலுப்பை போன்ற அவரது பேச்சால் சின்னுவுக்கும் கொஞ்சம் தெளிவு வந்தது. இதற்கிடையில் மகளிடம் எங்களிருவரதும் வீட்டுக்கு செய்தி சொல்லி அனுப்பிவிட்டிருந்தார். அக்கா, தன் மகள் மேல் மிகவும் அன்பு வைத்திருந்தார். மிகவும் செல்லமாக வளர்த்தவளை தனியே எங்கேயும் அனுப்பாதவர் அந்த மாலைவேளையில் அன்று எங்கள் வீடுகளுக்கு அனுப்பினார்.

        இருவர் வீடுகளிலிருந்தும் பதற்றத்தோடு ஆட்கள் ஓடி வந்தனர். சைக்கிள்களைப் பிறகு எடுக்கலாம் எனச் சொல்லி அவர்கள் அவரவர் வீடுகளுக்கு எங்களை அழைத்துச் சென்றனர். அதன் பிறகு வீட்டில் எல்லோராலும் எனக்குப் பெரிய அர்ச்சனைகள் நடந்திருக்கக் கூடும். எனக்கு எதுவும் தெரியவில்லை. அப்படியே தூங்கியவன் காலையில் தான் விழித்தேன். மயக்கம் முழுசாகத் தெளிந்திருந்தது எனினும் வாய்ச் சிவப்புப் போகவில்லை. தங்கை என்னைக் காணும்போதெல்லாம் விழுந்துவிழுந்து சிரித்தாள். இப்பொழுது சைக்கிளை எடுத்து வரப் போகவேண்டும். அங்கு போக ஒரு வித வெட்கமாக இருந்தது. எனினும் அப்பா வந்து சைக்கிள் இல்லாவிட்டால் என்னைப் போட்டு மிதிப்பாரோ எனப் பயந்து சைக்கிளை எடுத்துவரப் போனேன்.

        பூரணம் அக்கா தெருவில் என்னைக் கண்டதுமே முகம் முழுதும் சிரிப்போடு அன்பாக உள்ளே வரச் சொல்லி வீட்டினுள்ளே வைத்திருக்கும் சைக்கிளை எடுத்துப் போகச் சொன்னார். அக்காவும் அவரது கணவரும் மட்டும் வீட்டிலிருந்தார்கள். கலைச்செல்வி பள்ளிக்குப் போயிருந்தாள். வந்த நேரம் நல்லதாகப் போயிற்று. சைக்கிளை எடுத்துப் போனால் இனி இந்தத் தெருப்பக்கமே வரக் கூடாது. அவ்வளவு வெட்கக் கேடு என எண்ணிக் கொண்டேன். சைக்கிளின் கம்பிகள் வளைந்திருந்தன. அக்கா கணவர் அதைத் தட்டித் தட்டி நேராக்கிக் கொண்டிருந்தார். இதற்கிடையில் அக்கா தேனீர் ஊற்றித்தந்தார். மறுக்கமுடியாமல் வெட்கத்தோடு வாங்கிக் குடித்தேன். அழகான சிறிய வீடு. வீட்டின் ஒவ்வொரு பாகமும் படுசுத்தம். அக்கா ஏதேதோ பேசிக்கொண்டிருந்தார். எனக்கு எதுவுமே புரியவில்லை. புன்னகைத்துக் கொண்டே இருந்தேன். சின்னுவின் சைக்கிள் வீட்டினுள்ளே அப்படியே கிடந்தது. அவனின்னும் எடுத்துப் போக வந்திருக்கவில்லை.
       
        அன்று அந்தச் சைக்கிளை எடுத்துக் கொண்டு வந்தவன்தான். பிறகு நானும் சின்னுவும் அந்தத் தெருப்பக்கமே போகவில்லை. இரண்டு வருடங்கள் கழித்து பிறகொருநாள் ஒரு விடிகாலையில் அந்த அசம்பாவிதம் குறித்துக் கேள்விப்பட்டோம். நம்பமுடியாமல் நானும் சின்னுவும் உடனே சைக்கிள்களை எடுத்துக் கொண்டு பூரணம் அக்கா வீட்டுக்கருகே விரைந்தோம். தெருவில் எல்லோரும் பார்த்திருக்க பூரணம் அக்கா திண்ணையில் அமர்ந்து கொண்டு சத்தமாக அழுதுகொண்டிருந்தார். 'குடி கெடுக்க வந்தவளே....' என்று வீட்டுப் படலையருகே நின்றபடி மிகக் கொச்சையாகச் சத்தமிட்டுக் கத்திக் கொண்டிருந்த நித்தியின் அம்மாவை நாலுபேர் பின்னுக்கு இழுத்துக் கொண்டிருந்தனர். விட்டால் ஓடிப் போய் பூரணம் அக்காவை அடித்துவிடுவார் போலிருந்தது. அவருக்கருகே நித்தியும் தன் பங்குக்கு ஒரு அரிவாளைக் கையில் வைத்துக்கொண்டு சத்தம் போட்டுக்கொண்டிருந்தான். அவனையும் சிலர் முன்னேறவிடாமல் இழுத்துப் பிடித்துக் கொண்டிருந்தனர்.

        'இதுக்குத்தான் ஓடிப்போனவளோட மகளை எடுத்து வளர்க்காதேன்னு அன்னிக்கு படிச்சுப் படிச்சு சொன்னேன்..அம்மா புத்திதானே புள்ளைக்கும் வரும்..இப்ப பாரு..அவ இவ புருஷனோடு ஓடிப்போய்ட்டா.அவன் ரெண்டு புள்ளைக்கு அப்பா வேற' எனத் தன் கம்பீரமான குரலில் கத்தியபடி அவர் கணவர் தனது நன்றாக இருந்த காலால் அக்காவின் இடுப்பில் உதைத்துக் கொண்டிருந்தார். பதினைந்து வருடங்களுக்குப் பிறகு திரும்பவும் அந்த வீட்டுக்கு அன்று மதியம் போலிஸ் வந்தது.

- எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை



நன்றி
# அநங்கம் மலேசிய தீவிர இலக்கிய இதழ் (டிசம்பர் 2009) - சிறுகதைச் சிறப்பிதழ்
# திண்ணை

Tuesday, January 5, 2010

புத்தாண்டுக் கனவு (கனவுக்கு ஹிட்லரே சிரிப்பார்)




நிறைந்த கனவுகளின் பாரம் தாங்காது
மனப் பொதி ஒரேயடியாக வெடித்து
அதிர்ஷ்டத்தின் குறியுடனான ஒரு கனவு
கவிதையொன்றுக்கு மழையெனப் பெய்யும்

நாசிக்கடியில் குறு மீசைக்குப் பதிலாக
மீசை வளர்த்துக் கொண்ட ஹிட்லர்
*நீலப் படைகளுக்கு இடையிலும்
*சிவப்புப் படைகளுக்கு இடையிலும்
ஒரே நேரத்தில் நடமாடுவார்

ஒரே இடத்தில் சுழலும் ரூபாய் நாணயத்தில்
தலைப் பக்கத்திலும்
பூ பக்கத்திலும்
மீசை முறுக்கும் ஹிட்லர்
குப்புறக் கவிழ்ந்து
கனவுக்கு மெலிதாகச் சிரிப்பார்

*நீல வர்ணத்தை வானமும் வெறுக்கும்
**பச்சை வர்ணத்தை மரம்,கொடிகள் வெறுக்கும்
*சிவப்பு வர்ணத்தை குருதி வெறுக்கும்
கனவுக்கு ஹிட்லரே சிரிப்பார்

புது வருடத்துக்கு
புதிதாகக் காணும் கனவு
எத்தனை மென்மையானது?

பழைய கனவுக்கு உரித்தானவன் நான்
எவ்வளவு முரடானவன் ?

மூலம் - மஞ்சுள வெடிவர்த்தன (சிங்களமொழி மூலம்) 20091230
தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை


*நீலமும், சிவப்பும் - இலங்கையில் எதிர்க்கட்சிகளாக இருந்து ஒன்றாகிய தற்போதைய ஆளுங்கட்சியின் நிறங்கள்
** பச்சை - இலங்கையில் எதிர்க்கட்சியின் நிறம்.


நன்றி
# உயிர்மை
# இனியொரு
# நவீன விருட்சம்

Monday, January 4, 2010

' ஒரு கடல் நீரூற்றி...' ஒலிக்கும் பெண் குரல்

ஒருவர் தான் பார்த்த, கேட்ட, அனுபவித்த விடயங்களை மற்றவரும் புரியும்படி எத்திவைப்பதென்பது எழுத்தின் முக்கியப்பணி. எழுத்துக்களின் வகைகளில் கவிதை முக்கிய இடம் பெறுகிறது. கவிதை எனச் சொல்லி எதையோ கிறுக்கிவிட்டு, வாசிப்பவர் மனதில் எவ்விதத் தாக்கத்தையும் ஏற்படாமல் போகும் எழுத்துக்களைக் கவிதை எனச் சொல்வது இயலாது.


ஃபஹீமா ஜஹான் இதுவரையில் எழுதியிருக்கும் ஐநூறுக்கும் அதிகப்படியான கவிதைகளிலெல்லாம் வாசிப்பவர்களின் மனதில் சோகத்தைப் பூசிச்செல்வது தான் அவரது கவிதைகளின் வெற்றி. எழுதும்போது அவர் சிந்தித்த கருவை வாசகர் மனதிற்குப் புரிய வைக்கும்படியான சொல்லாடலில் அவரது கவிதைகள் மிளிர்கின்றன. ஒவ்வொரு கவிதையிலும் காணப்படும் சொற்களின் வித்தியாசம்,எளிமையான ரசனை மிக்க வரிகள் ஆகியன ஆயாசமின்றிக் கவிதைகளை வாசிக்கத் தூண்டுகின்றன. கவிதை வாசித்து முடித்தபின்னரும் அதுபற்றியதான பிம்பங்களை தொடர்ந்து மனதிற்குள் ஓடச்செய்தவாறு இருப்பதே சிறந்த கவிதையின் அடையாளம். அது போன்ற சிறந்த கவிதையின் அடையாளங்களைத் தன்னகத்தே கொண்டிருக்கின்றன ஃபஹீமா ஜஹானின் கவிதைகள்.

ஏறத்தாழ பத்து வருடங்களுக்கும் மேலாகக் கவிதைகள் எழுதிவரும் இவரது முதல் தொகுப்பு 'ஒரு கடல் நீரூற்றி...'.பனிக்குடம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டிருக்கும் இந்தத் தொகுப்பு முன்னுரைகளெதுவுமற்று நேரடியாகக் கவிதைகளுக்குள் இழுத்துச் செல்கிறது. புத்தக அட்டையோடு சேர்த்து அதன் பக்கங்களும் மிக எளிமையான வடிவத்தில் கோர்க்கப்பட்டு கவி சொல்லும் துயரங்களை மட்டும் உரக்கப்பேசச் செய்கின்றது.

'அவசரப்பட்டு நீ
ஊரைக் காணும் ஆவலிலிங்கு வந்துவிடாதே
வதைத்து எரியூட்டப்பட்ட சோலைநிலத்தினூடு
அணிவகுத்துச் செல்லும் காவல்தேவதைகள்
அமைதியைப் பேணுகின்றன.
அந்த ஏகாந்தம் குடியிருக்கும்
மயானத்தைக் காண உனக்கென்ன ஆவல்?
வந்துவிடாதே '

எனும் அட்டைக் கவிதை சொல்லும் வலிகளோடு ஆரம்பிக்கிறது ஃபஹீமா ஜஹானின் 'ஒரு கடல் நீரூற்றி...' கவிதைத் தொகுப்பு.

தொகுப்பின் முதல்கவிதையாக 'அம்மையே உனைக் கொன்ற பழி தீர்த்தவர்களாய்..' ஒரு கிராமத்துப் பெண்ணின் யௌவனக் காலம் தொட்டு முதுமை வரையில் அவளது வாழ்வை, அவள் வாழும் வாழ்வினை அழகாகச் சொல்கிறது. அந்தப்பெண்ணின் வாழ்வியலைக் கவிஞர் இப்படி அழகாக ஆரம்பிக்கிறார்.

ஆண்களை மயக்கும் மாய வித்தைகளை
நீ அறிந்திருக்கவில்லை:
ஓர விழிப் பார்வைகளோ...
தலை குனியும் தந்திரங்களோ... உன்னிடமிருக்கவில்லை!
தெளிவும் தீட்சணியமும் உன் பார்வையிலிருந்தது:
உறுதியும் தைரியமும் உன் நடையிலிருந்தது:
அலங்காரமும் ஒப்பனையும் உன்னிடமில்லாதிருந்தது:
எளிமையும் பரிசுத்தமும் நிரம்பியதாய் உன் வாழ்க்கையிருந்தது!

சுய ஒழுக்கமும் தூய்மையும் நிறைந்த ஒரு கிராமத்துப் பெண்ணின் குண இயல்புகளை அழகாகச் சித்திரப்படுத்துகிறது இந்த வரிகள். இனி அவரது தொழில் குறித்தும் அவரது வீரதீரங்கள் பற்றியும் இப்படிச் சொல்கிறார்.

இளம் பெண்ணாக அப்பொழுது
வயல் வெளிகளில் மந்தைகளோட்டிச் செல்வாய்:
அடர்ந்த காடுகளிலும்...
வெள்ளம் வழிந்தோடிய ஆற்றங்கரைகளிலும்...
விறகு வெட்டித் தலைமேல் சுமந்து திரும்புவாய்!
அப்போதந்தக் காடுகளில் வாழ்ந்த பேய்,பிசாசுகள்
தூர இருந்து கனைத்துப் பார்த்துப் பின்
மறைந்து போவதாய் கதைகள் சொல்வாய்!
வீட்டிலும் வெளியிலும் உன் குரலே ஓங்கியொலித்தது!

இங்கு குறிப்பிடப்பட்டிருக்கும் பேய், பிசாசுகள் உண்மையான பேய், பிசாசுகள் தானா? சமூகத்தையும் அதிலிருந்து கொண்டு அதிகாரங்கள் விதித்திடும் சில கயவர்களையும் சேர்த்துத்தான் இச்சொற்கள் குறிப்பிடுகின்றன என நினைக்கிறேன். வீட்டிலும் வெளியிலும் அவள் குரல் தைரியமாக ஓங்கியொலித்திருக்கிறது. அப்போதைய அக்கிராமப் பெண் அப்படியிருந்திருக்கிறாள்.

காலப் பெருஞ் சுழியில்-நீ
திரிந்து வளர்ந்த அடவிகள் யாவும் மெல்ல அழிந்தன:
பளிங்கு போல் நீரோடிய அருவிகள் யாவும்
அசுத்தமாகிப் பின் தூர்ந்து போயின:
கடந்த காலம் பற்றிய உன் கதைகளிலெல்லாம்
கசப்பான சோகம் படியலாயிற்று!

காலம் தன் எல்லைகளைச் சுருக்கி அவளில் முதுமையை வரைய ஆரம்பித்த கதையை அழகாகச் சொல்கிறார்.அவளிலிருந்த அத்தனை வசந்தங்களையும் காலம் வற்றச் செய்து,

உன் பொழுதின் பெரும் பகுதி
படுக்கையில் முடங்கிப் போனது!
ஓய்வற்றுத் திரிந்த உனது பாதங்கள்
பயணிக்க முடியாத் திசைகள் பார்த்துப் பெருமூச்செறிந்தன:
வேலைகளை எண்ணி
உனது கரங்கள் துடிக்கும் பொழுதுகளில்
இயலாமைகள் கொண்டு புலம்பத் தொடங்குவாய்!

படுக்கையில் தள்ளியவிடத்துத் தன் பால்யத்தையும் ஓடியாடி வேலை செய்து களித்த நாட்களையும் எண்ணிச் சோர்ந்து புலம்பல்களில் பொழுதைக் கழிக்கும் அம் மூதாட்டியின்

நோய் தீர்க்கவென
சந்தடிகள் நிரம்பிய நகரக்குக் கூட்டிவரப் பட்டாய்!
உன் காற்றும் நீரும் மண்ணும் ஆன்மாவுமிழந்து...
நகரடைந்தாய் நீ மட்டும்!
உணர்வுகள் அடங்கி ஓய்ந்த பின் ஒரு நாள்
உறவுகள் கூடி உனைத் தூக்கிச் சென்றனர்...
உனக்கான மண்ணெடுத்த பூமி நோக்கி!
அம்மையே!
இப்போது நாம் வாழ்கிறோம்
எல்லோர் கையிலும் பொம்மைகளாக...!

பழகிய தடங்களிலிருந்து புதுப் பாதைகளில் பயணித்த உயிர் அடங்கிய கணத்தோடு இப்போதைய பெண்களின் வாழ்க்கையை பொம்மைகளுக்கொப்பிட்டு அருமையாகக் கவிதையை முடிக்கிறார் கவிஞர். இது கவிதை மட்டும் தானா? உயிர் வதைக்கச் சுடும் நிஜம் அல்லவா?

தொகுப்பிலிருக்கும் இன்னொரு கவிதையான ' இரகசியக் கொலையாளி' கவிதையும் ஒரு கிராமத்து மூதாட்டியைப் பற்றியது. தனது அம்மம்மாவின் அந்திமக் காலத்தில் தன்னால் அருகில் இருக்கமுடியவில்லையே என்ற ஏக்கத்தை வெளிப்படுத்துவதாக அமைகிறது இக்கவிதை. தனது சிறிய வயது முதல் தன்னைப் பார்த்துப் பார்த்து வளர்த்திட்ட அம்மம்மாவைச் சிலகாலம் பிரிய நேர்கிறது கவிஞருக்கு. அப்போதைய அம்மம்மாவின் மனநிலையை அழகாக விவரிக்கிறது கவிதையின் இவ்வரிகள்.

உனைப் பிரிந்து நான்
நீள் தூரம் சென்ற காலங்களில்
உயிர் வதைபட வாழ்ந்திருந்தாய்
மீளவந்து உனைக் காணும்
ஒவ்வொரு காலத்திலும்
அநாதரவாய் விடப்பட்ட
உனதுயிரின் கரைகளை
அரித்தரித்தே அழித்திருக்கும்
மூப்பும் துயரும்

அம்மம்மாவின் இறுதிக் கணங்களில் தான் அருகில் இல்லாமல் போனதைப் பெரிதும் வலியுடனும், ஆயுள் முழுதும் மனதில் ஆணியடித்துக் கிடக்கும் குற்றவுணர்வோடும் பதிந்திருக்கிறார் இப்படி.

உன் கடைசி நிம்மதியும்
நான் தான் என்பதை ஏன் மறந்தேன்?
கைசேதமுற்றுத் தவிக்கும் ஆன்மாவைச்
சாவு வரையும் சுமந்தலைய
ஏன் விதிக்கப் பட்டேன்?

தொகுப்பில் இவரது அடுத்த கவிதையான 'அவள் அவளாக' கவிதை ஆண்களின் சிம்மாசனங்களுக்கு அடிமைப் பெண்களாக வாழும் பெண்களின் துயரங்களைப் பாடுகிறது .

உனது தேவதைக் கனவுகளில்
அவளுக்குக் கிரீடங்கள் வேண்டாம்:
உனது இதயக் கோவிலில்
அவளுக்குப் பூஜைப் பீடம்வேண்டாம்:
உனது ஆபாசத் தளங்களில்
அவளது நிழலைக் கூட
நிறுத்தி வைக்க வேண்டாம்:
வாழ்க்கைப் பாதையில்
அவளை நிந்தனை செய்திட
உனது கரங்கள் நீளவே வேண்டாம்!

என வலியுறுத்தும் கட்டளைகளோடு ஆரம்பிக்கும் கவிதை, எளியவரிகளில் புரிந்து கொள்ள எளிதாக இருப்பதானது இக்கவிதையின் பலம் எனலாம். பல கவிஞர்கள் , மற்றும் பலர் பெண்களை வர்ணிக்கப் பயன்படுத்துபவற்றைத் தனது சொற்களில் சாடுகிறார் இப்படி.

அவளது விழிகளில் உனதுலகத்தின்
சூரிய சந்திரர்கள் இல்லை :
அவளது நடையில்
தென்றல் தவழ்ந்து வருவதில்லை:
அவளது சொற்களில்
சங்கீதம் எழுவதும் இல்லை:
அவள் பூவாகவோ தளிராகவோ
இல்லவே இல்லை!

ஆண்களின் உலகில் பெண்களின் நடவடிக்கைகள் எல்லாம் கூட ஆண்களாலேயே தீர்மானிக்கப் படுகின்றன. அவளது சுயம் தகர்த்து அதில் தன் ஆளுமையை விருத்தி செய்ய முயற்சிக்கின்ற ஆண்களுக்குக் கவிதையின் இறுதிப் பகுதி சாட்டையடி.

காலங்காலமாக நீ வகுத்த
விதிமுறைகளின் வார்ப்பாக
அவள் இருக்க வேண்டுமென்றே
இப்போதும் எதிர்பார்க்கிறாய்


உனது வாழ்வை வசீகரமாக்கிக் கொள்ள
விலங்குகளுக்குள் அவளை வசப்படுத்தினாய்:
நான்கு குணங்களுக்குள் அவள்
வலம் வர வேண்டுமென வேலிகள் போட்டாய்:
அந்த வேலிகளுக்கு அப்பாலுள்ள
எல்லையற்ற உலகை
உனக்காக எடுத்துக் கொண்டாய்!


எல்லா இடங்களிலும்
அவளது கழுத்தை நெரித்திடவே
நெருங்கி வருகிறது உனது ஆதிக்கம்!


அவள் அவளாக வாழ வேண்டும்
வழி விடு!

இதே போன்ற கருவை தொகுப்பில் உள்ள 'பேறுகள் உனக்கு மட்டுமல்ல' கவிதையும் கொண்டிருக்கிறது.

அவளைப் பலவீனப் படுத்த
எல்லா வியூகங்களையும் வகுத்த பின்பும்
அவளை உள் நிறுத்தி எதற்காக
இன்னுமின்னும் வேலிகளை எழுப்புகிறாய்?

எனத்தொடரும் கவிதையானது ,

உனதடி பணிந்து தொழுவதில் அவளுக்கு
ஈடேற்றம் கிடைக்குமென்றாய்:
கலாசாரம்,பண்பாடு எனும் அரிகண்டங்களை
அவளது கழுத்தில் கௌரவமாய்ச் சூடினாய்


உனது மயக்கங்களில்
தென்றல்,மலர்,இசை...
தேவதை அம்சங்களென...
அவளிடம் கண்டவையெல்லாம் பின்னர்
மாயைகளெனப் புலம்பவும் தொடங்கினாய்

என மகளாக, சகோதரியாக, மனைவியாக, அன்னையாக அர்த்தமுள்ள உருவெடுக்கும் பெண்ணவளைச் சாய்க்கும் உத்தியோடு வரும் ஆண்களிடம் கேள்விகேட்டுச் சாடுகிறது இக்கவிதை.

அடுத்த கவிதையான 'அவர்களுக்குத் தெரியும்' கவிதையானது யுத்த மேகம் சூழத் தொடங்கிய காலப் பகுதியைப் பேசுகின்றது. யுத்தம் சூழ்வதற்கு முன்னரான ஏகாந்தமும் அமைதியும் நிலவிய ஊரின் பகுதியினைக் கவிஞர்,

எமது கல்லூரி வளவினுள்ளே
வன விலங்குகள் ஒளிந்திருக்கவில்லை:
எமது நூலகத்தின் புத்தக அடுக்குகளை
ஓநாய்களும் கழுகுகளும்
தம் வாழிடங்களாய்க் கொண்டதில்லை:
நிலாக்கால இரவுகளில்
உப்புக் காற்று மேனி தழுவிட
விவாதங்கள் அரங்கேறிடும்
கடற்கரை மணற்றிடலில்
பாம்புப் புற்றுகளேதும் இருக்கவில்லை:
மாலைகளில் ஆரவாரம் விண்ணளாவிட
எமதிளைஞர்
உதைபந்தையன்றி வேறெதையும் உதைத்ததுமில்லை:
பக்திப் பரவசத்தில் ஊர் திளைக்கும் நாட்களில்
எமதன்னையர்
நிவேதனத்தையன்றி வேறெதனையும்
இருகரமேந்தி ஆலயமேகவுமில்லை!

இப்படிக் குறிப்பிடுகிறார். இப்படி அழகான அமைதி குடியிருந்த ஊரில் ஓர்நாள்,

இங்கெல்லாம் புரியாத மொழி பேசியவாறு
துப்பாக்கி மனிதர்கள்
ஊடுறுவத் தொடங்கிய வேளை
விக்கித்துப் போனோம்:
வார்த்தைகள் மறந்தோம்.
எமது கல்லூரி,நூலகம்,கடற்கரை,
விளையாட்டுத்திடல்,ஆலயமெங்கிலும்
அச்சம் விதைக்கப் பட்டு
ஆனந்தம் பிடுங்கப் பட்டதை
விழித்துவாரங்களினூடே
மௌனமாய்ப் பார்த்திருந்தோம்!


அறிமுகமற்ற பேய் பிசாசுகளையெல்லாம்
அழைத்துக் கொண்டு இரவுகள் வந்தடைந்தன.
எமது வானவெளியை
அவசரப்பட்டு அந்தகாரம் ஆக்கிரமித்தது.
அடர்ந்து கிளைவிரித்துக் காற்றைத் துழாவிய படி
எம்மீது பூச்சொறிந்த வேம்பின்
கிளைகள் முறிந்து தொங்கிட அதனிடையே
அட்டுப் பிடித்த கவச வாகனங்கள்
யாரையோ எதிர் கொள்ளக் காத்திருந்தன.


எமதண்ணன்மார் அடிக்கடி காணாமல் போயினர்:
எமது பெண்களில் வாழ்வில்கிரகணம் பிடித்திட
எதிர்காலப் பலாபலன்கள் யாவும்
சூனியத்தில்கரைந்தன.

யுத்தத்தின் பிடியிலிருந்து எதிர்காலத்தைத் தொலைத்த உயிர்களின் எஞ்சிய வாழ்வினை எவ்வாறெல்லாம் யுத்தம் பாதித்திருக்கிறதெனக் கவிதையின் இறுதியில் இப்படிச் சொல்கிறார்.

தற்போதெல்லாம் குழந்தைகள்
இருளை வெறுத்துவிட்டு
சூரியனைப் பற்றியே அதிகம் கதைக்கிறார்கள்:
அவர் தம் பாடக் கொப்பிகளில்
துப்பாக்கிகளை வரைகிறார்கள்:
பூக்களும் பொம்மைகளும் பட்டாம் பூச்சிகளும்
அவர்களைவிட்டும் தூரமாய்ப் போயின:

தொகுப்பிலுள்ள 'உங்கள் மொழியும் எங்கள் வாழ்வும் வேறாக்கப்பட்ட பின்' என்ற கவிதையும் யுத்தத்தைப் பின்புலமாகக் கொண்ட கவிதை. 'ஒரு மயானமும் காவல்தேவதைகளும்' கவிதையும் யுத்தம் தின்று முடித்து எச்சிலான ஊர்களின் நிலையினைப் பேசுகிறது இப்படி.

ஆடிப்பாடிப் பின் அவலம் சுமந்து நீங்கிய
சோலைவனத்தைத் தீயின் நாவுகள் தின்றுதீர்த்தன
நெற்கதிர்கள் நிரம்பிச் சலசலத்த வயல்வெளிகளை
இரும்புச்சக்கரங்கள் ஊடுருவித் தகர்த்தன
எஞ்சிய எமது பள்ளிவாயில்களும் அசுத்தமாக்கப்பட்டன


நானும் நீயுமன்றி
இந்தப் பரம்பரையே தோள்களில் சுமையழுந்திடத்
திசைக்கொவ்வொன்றாய்ச் சிதறுண்டுபோனது
கல்வியும் உழைப்பும் கனவுகளை மெய்ப்பித்திட
ஆனந்தம் பூரித்த நாட்கள் இனியில்லை
பாழடைந்த படகுத்துறைகள்
காடடர்ந்த பயிர்நிலங்கள்
தலை கருகிய கற்பகத்தருக்கள்
தரைமட்டமாகிப்போன எங்கள் குடிமனைகள்
எல்லாம்
பேய்கள் சன்னதம்கொண்டாடிய கதையினைச் சொல்லும்

இதே போன்றதொரு துயரம் நிறைந்த யுத்த இரவொன்றைத்தான் 'முகவரியற்ற நெருப்புநிலவுக்கு' கவிதையும் பேசுகிறது.

மயான அமைதி பூண்ட சூழலைத் தகர்த்தவாறு
வீதியில் ஓடும் காலடிச் சத்தம்-அச்சத்தினூடு
என் கேட்டல் எல்லையினுள் வளர்ந்து தேய்கிறது.
பின் தொடரும் அதிர்ந்து செல்லும் வண்டியில்
அவர்கள் வலம் வருகிறார்கள் போலும்
ஓடிய அந்தப் பாதங்கள் எந்தச் சந்து தேடி ஒளிந்தனவோ?
உருத்தெரியா அந்தக் காலடிகளுக்காக உள்ளம் துடித்தழுதது

அச்சம் கலந்து பிசைந்து விழுங்கிய உணவும்
பீதியுடன் தொண்டைக் குழிக்குள் இறங்கிய நீரும்
பிசாசுகளை எண்ணிப் பயந்ததில் தீய்ந்து விட்டன

எனத் தொடரும் கவிதையில் யுத்தமானது தனது தோழியை ஆயுதம் சுமக்க வைத்ததன் பாரத்தை இறக்கிவைக்கிறது.

இறுகிய முகக் கோலத்தை எப்படிப் பொறுத்தினாயோ?
நெஞ்சிலும் முதுகிலும் ஏதேதோ நிரப்பிய பைகளுடன்
சுடுகலன் ஏந்திய சிலை முகத்தைக் கற்பனை செய்து
பெருமூச்செறிந்தேன்: நீ இனி வரப் போவதில்லை

இதே துயரைப் பாடும் இவரது இன்னொரு கவிதைதான் ' ஒரு கடல் நீரூற்றி...'. கடற்போரொன்றுக்குச் சென்று உயிரிழந்த சினேகிதியின் உடல்களேதுமற்ற நினைவு மண்டபத்துக் கல்லறையில் அவளுடலுக்குப் பதிலாக ஒரு கடல் நீரூற்றி நிரப்பிடவோ எனக் கேட்கிறார் கவிஞர்.

அலையெழும்பும் கடல் பரப்பினில்
உனக்கான பணி முடிக்கவென விடைபெற்றுப் போனாய்:
வாழ்த்துச் சொல்ல வாயெழவுமில்லை!
ஆரத்தழுவிட நீ விரும்பவுமில்லை !
வெளியே பெய்த மழை என் கன்னங்களில் வழிந்தோட...
மழைப் புகாரினூடே மறைந்து போனாய் !

திரைகடல் சென்ற திரவியமானாய் !
ஆழிப்பரப்பெங்கும் ஊழித்தீ எழுந்து தணிந்தது-நீ
திரும்பி வரவே இல்லை !


இன்று வீரர்கள் துயிலும் சமாதிகள் மீது
காலத்துயரின் பெரு மௌனம் கவிழ்ந்துள்ளது !
சமுத்திரத்தையே சமாதியாகக் கொண்டவனே !
இங்கு ஏதுமற்ற உன் கல்லறையில்
ஒரு கடல் நீரூற்றி நிரப்பிடவோ?

வனாந்தரங்களை இழந்து, வசந்தங்களை இழந்து, தனது கூட்டினை இழந்து, தன் துணையினை இழந்து தனியே வாடும் ஒரு பறவைக்கு அனாதரவான ஒரு பெண்ணை ஒப்பிட்டே 'அழிவின் பின்னர்' கவிதையை எழுதியிருப்பதாகக் கொள்கிறேன்.

வெட்டி வீழ்த்தப் பட்ட மரத்தின்....
அடிக்கட்டை மீது
அமர்ந்துள்ளது பறவை


இன்று அதனிடம்
பறத்தலும் இல்லை..
ஒரு பாடலும் இல்லை....

'எனது சூரியனும் உனது சந்திரனும்' கவிதையின் சில வரிகள் காதலின் பாடலை அழகாக இசைக்கிறது இப்படி.

உன் வானிலொரு சூரியனையும்
என் வானிலொரு சந்திரனையும் கண்டோம்
கதைப்பதற்கு இருந்த எல்லாச் சொற்களும்
கண்களிலேயே தேங்கிடக் கண்டோம்

காதலர்களின் சம்பாஷணைகள் அதிகமாகக் கண்களிலேயே நிகழ்ந்துவிடுகின்றன.காதல், அதன் களிப்புகள், காயங்கள், காத்திருப்புகள் அனைத்தினது பாஷைகளும் ஓர விழிப் பார்வையிலும் ஒரு கண் சிமிட்டலிலும் கண்டுபிடிக்கப்படுகின்றன காதலரிடையே. அதனை ஆழமாகவும் அழகாகவும் எளிமையாகவும் வெளிப்படுத்துகின்றன மேலுள்ள வரிகள்.

பின் வந்த காலத்தில் பிரிவு வந்ததைச் சொல்ல கீழே உள்ள இரு அழகிய வரிகள் போதுமாக இருக்கிறது இவருக்கு.


எனது சூரியனும் தனித்துப் போயிற்று
உனது சந்திரனும் தனித்தே போயிற்று

இதே போலப் பிரிவை அருமையாகச் சொல்லும் இன்னுமொரு கவிதைதான் ' என்னிடம் விட்டுச் சென்ற உன் பார்வைகள்' கவிதையும்.
அதில் பிரிவைச் சொல்லும் அழகிய வரிகள்,

கண்ணீரையும் பிராத்தனையையும்
ஏந்தி உயர்கின்ற கரங்களின் விரலிடுக்கினூடு
உறவின் நூலிழைகள் வழிகின்றன.

'என்ன சொல்கிறாய் ?' கவிதையானது தேசத்தின் மீது கவிஞர் கொண்டுள்ள நேசத்தையும், அது தற்போது இன்னல்கள் பல தருகிறதெனினும் அந்தத் தாய்தேசம் மீது தான் கொண்ட காதலைக் கடைசி வரிகளில் மிக அழகாக வெளிப்படுத்தியிருப்பது பிரமிக்கச் செய்கிறது.

தினமும் வாழ்வு சூனியத்தில் விடிந்திட…
உயிர்கள் எந்தப் பெறுமதியுமற்று அழிந்திட
யாருக்கும் யாருமற்ற சாபம் பிடித்த வாழ்வைச்
சபித்தவளாக நான் வாழ்ந்த போதும்
எனது தேசம் எனக்கு வேண்டும்!
நீ என்ன சொல்கிறாய் ?

'இரு திசைவழி போனபின்' கவிதையானது தனது அண்ணனுக்கான கவிதையாக இருந்தபோதிலும் அதன் வரிகளினூடே தங்கையின் வாழ்க்கையை அழகாக விவரிக்கிறது.

என் மனதிலிருந்து துயர அலைகள் எழுந்து
ஆர்ப்பரித்துப் பொங்கும் வேளைத்
தூர நிலம் கடந்து
உனக்குள்ளும் அலைகள் எழுமோ?
மனதை விட்டு
உன் நினைவு தொலைந்து போயிருக்கும்
அவ்விருண்ட பொழுதுகளில்
தொலைபுலத்துக்கப்பாலிருந்து வரும்
உனதழைப்புக்கு நன்றி.

என்ற நன்றியோடு தொடரும் கவிதையானது அவளது துயரங்களையும் அவனுடனிருந்த பொழுதுகளில் அவனது அன்பான நடவடிக்கைகளையும் விபரித்து, அவளது இன்றைய வாழ்விலும் தொடரும் துயரங்களைச் சொல்லி ஓய்கிறது.

வீடென்ற சிறைக்குள் சிக்குண்டவள்
மீளவும் மீளவம் நரகத்துழல்கிறேனடா!
இங்கு தினமும் நான் காணும்
பல்லாயிரம் மனிதரிடையேயிருந்து
எப்போது நீ தோன்றி மீண்டும் புன்னகைப்பாய்?

'இருண்டுபோகின்ற நாமும் ஒளி வழங்கும் அவளும்' கவிதையான வாழ்வின் ஒளியாக விளங்கும் அன்னையைப் பற்றியது.

அவரவர் வேலைகளில் வீடு மூழ்கியிருந்த
மழைக்கால இரவொன்றில்
நிசப்தத்தையும் இருளையும்
உள் நிறுத்திப் போயிற்று மின்சாரம்!

நிசப்தத்தையும் இருட்டையும் வீட்டை ஆக்கிரமிக்கச் செய்து ஒளிந்துகொண்ட வெளிச்சத்தை அன்னை காவிவந்து ஒளியூட்டும் ஒரு நாளின் இரவைப்பற்றிய இக்கவிதையை வாசிக்கையில் காட்சிகள் கண்முன்னே விரிகின்றன. மீண்டும் ஒளியற்றுப் போனபொழுதில் அன்னைக்கு வெளிச்சம் ஏந்திச் செல்ல யாருமற்றுப் போனதையும், அவ் வெளிச்சத்தைத் தன் பிள்ளைகளிடமிருந்து எதிர்பார்க்காத தியாகம் பொருந்திய பெண்ணாகத் தாய் அழகாகச் சித்தரிக்கப்பட்டுக் கவிதை பூர்த்தியாகியிருக்கிறது.

மறுபடியும் இருளினுள் வீடமிழ்ந்த பொழுது
சமையலறையினுள் சிக்கியிருந்த அம்மாவுக்கு
ஒளிச் சுடரொன்றினை ஏந்தி யாருமே நடக்க வில்லை:
எவரின் உதவியும் இன்றி
இருளினுள்ளேயிருந்து
எல்லோருக்குமான உணவைத் தயாரித்தாள் எனதன்னை

'சாபங்களையகற்றிய குழிகளின் மீதிருந்து...' கவிதையானது போர்க் காலப்பகுதிகளில் யுத்தப்பிரதேசங்களில் விதைக்கப்பட்ட நச்சுக்கிழங்குகளை (கண்ணிவெடிகளை)ப்பற்றியது.

அவர்களும் விதைத்தனர்
இவர்களும் விதைத்தனர்:
எந்தப் பாதமொன்றோ தம் மீது படும் வரை
உருமலை உள்ளடக்கிக்
காலங்கள்தொறுமவை காத்துக்கிடந்தன!


தத்தித் தவழும் பாலகனோ...
ஏழைத் தாயொருத்தியோ...
இனிய இளைஞனொருவனோ...
மதகுருவோ...
மேய்ச்சலுக்குச் சென்ற மந்தையொன்றோ...
அல்லது
குறிவைத்த அவர்களிலும் இவர்களிலும் எவரோ?

போர் நிறுத்த ஒப்பந்தம் சாத்தியப்பட்ட காலங்களில் கண்ணிவெடிகளைத் தோண்டியகற்றும் தொண்டுநிறுவனங்கள் வந்தன. அவற்றின் ஊழியர்கள் வந்து தேடித்தேடி அகற்றிய நச்சுக்கிழங்குக் குழிகளில் இனி எதனை விதைக்கப் போகிறோமெனக் கேட்டு முடிக்கிறார் கவிஞர்.

நெஞ்சிலுள்ள செஞ்சிலுவை அவனைக் காத்திட
தன் கரம் சுமந்த கோலுடன்
அங்குலமங்குலமாக
வன்னிப் பெரு நிலம் தடவி நச்சுக் கிழங்குகள் தோண்டுகிறான்!


எங்கிருந்தோ வந்த தேவ தூதனாய்
எம்மொழியும் அறியான்...எமதினமும் அறியான்...
அவனொருவன் சாபங்களைத் தோண்டியகற்றிய குழிகளில்
நாமினி எதை நடப் போகிறோம்?

ஒரு சிறுமியின் கால்பாதம் கோழிக்குஞ்சொன்றின் தலைமீதேறியதோர் நாள். இரு ஜீவன்களினதும் உயிர் துடித்த கதையைப் பரிதவிப்புடன் விளக்குகிறது 'சிறுமியின் கோழிக்குஞ்சு' கவிதை. இறுதியில் கோழிக்குஞ்சு இறந்து போய்விட அதன் வரிகளை வாசித்துமுடித்த பின்னர் பெரும் பாரமொன்று மனதில் அப்புகிறது.

குஞ்சுடன் முன்னும் பின்னும் அலைந்து
சிறுமியின் பார்வைக்குத் தப்பித் திரிந்த மரணம்
முதலில் அதன் சின்னஞ் சிறு சிறகிரண்டிலும் வந்தமர்ந்தது:
சிறகுகள் கீழே தொங்கிட மெல்ல மெல்ல நகர்ந்தது குஞ்சு:
அந்திப் பொழுதில் சாவு அதன் கழுத்தின் மீதேறி நின்றது:
ஒரு மூதாட்டி போலச் சிறகு போர்த்தி
அசைவற்றுப் படுத்தது குஞ்சு!


இரவு நெடு நேரம் வரை காத்திருந்த மரணத்தின் கரங்கள்
சிறுமி தூங்கிய பின்னர்
துண்டு நிலவும் மறைந்து வானம் இருண்ட பொழுதில்
அந்தச் சிறு உயிரைப் பறித்துப் போயிற்று!

'வயற்காட்டுக் காவற்காரி' கவிதையானது சுயமிழக்க நிர்ப்பந்திக்கப்பட்ட ஒரு பெண்ணின் நிலையை துயர்மிகப் பாடுகிறது. கவிதையின் முதல்வரிகள் வயற்காட்டுப் பொம்மையொன்றைப் பற்றிய அழகிய வர்ணனைகள் கொண்டது.

கொட்டும் மழையிலும் - அவள்
சிரித்துக்கொண்டிருப்பாள்
எரிக்கும் வெயிலிலும் இன்முகத்துடனே இருப்பாள்
அவளது வேதனைகளை வெளிக்காட்டும்படியாக
அவளின் முகக்கோலம் அமைந்திருந்தால்
காணுகின்ற கண்களிலெல்லாம் கண்ணீர் வழியும்

என அதிரவைக்கும் வரிகள் துயர வாழ்வினைக் கொண்ட நிஜப்பெண்களின் வாழ்வையும்தானே குறிக்கின்றன ? எத்தனையோ போராட்டங்கள், எத்தனையோ தற்கொலைகள் இதைத்தானே பேசுகின்றன ? இறுதியில் மனமுறுத்தும் கேள்விகளைக் கேட்டுக் கவிதையை முடிக்கிறார் இப்படி.

அவளைத் தாங்கிநின்ற பூமியே !
அவளைப் பரிதாபமாய்ப் பார்த்திருந்த வானமே !
அவளது மௌனமும் ஒரு நாள் வெடிக்குமா
குமுறுகின்ற எரிமலையாக
அதிரவைக்கும் இடிமுழக்கமாக

இதே கருவைத் தாங்கிய இன்னொரு கவிதைதான் ' அவளுக்குச் சட்டம் வகுத்தது யார்?' கவிதையும். இதிலும் பெண்ணானவளை வயற்காட்டு பொம்மைக்கே ஒப்பிட்டிருக்கிறார்.

வாழ்வு பற்றிய நம்பிக்கைகள் இருந்திருப்பின்
கடல் நடுவே கைவிடப்பட்டிருப்பினும்
கரையேறி வந்திருப்பாள்
எவரின் தோட்டத்திலோ
குருவி விரட்டவும் காவல்புரியவும்
நிறுத்திவைக்கப்பட்ட பொம்மைச் சேவகியவள்

எனத் தொடரும் கவிதையானது

அவளுக்கே அவள் இல்லாமல் போனபின்னர்
அவளது ஆன்மாவின் அழிவைப் பற்றி அவளறியாள்
இதுவே அவளது
இன்றைய கதையும்
நாளைய கதையும்

என்பதோடு முற்றுப்பெருகிறது.

இக்கவிதைத் தொகுதியின் அனைத்துக் கவிதைகளும் ஒரு அருமையான அனுபவத்துக்கு இட்டுச் செல்வதோடு சில ஏக்கங்களை, சில விபரங்களை, சில நிஜங்களை, சில துயரங்களை மனதில் பரப்பியும் விடுகிறது. அதன் பாடுபொருட்களை நாமனைவரும் ஒரு கணமேனும் அனுபவித்திருப்போம். அறிந்திருப்போம். அதனையே அழகாகச் சொல்லுமிடத்து கவிதையின் உக்கிரம் இதயத்தில் ஆழமாகப் பதிகிறது. கவிதையின் நடையும், நான் முன்பு கூறியது போல எளிமையான ரசனை மிக்க வரிகளும் கவிதையை மேலும் அழகுறச் செய்கின்றன. தொடர்ந்தும் இதுபோன்ற சிறந்த கவிதைகளையெழுதும்படி வாழ்த்துவதோடு இன்னும் அதிகமான தொகுப்புக்களை வெளியிடுமாறு கவிஞரைக்கேட்டுக் கொள்கிறேன்.

-எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை


நன்றி
# தினகரன் வாரமஞ்சரி - 01.11.2009, 08.11.2009
# தமிழ் எழுத்தாளர்கள்
# புகலி
# பெண்ணியம்