Monday, March 15, 2010

குறி வைக்கப்பட்டுள்ள இன்னுமொரு லசந்த - நசுக்கப்படும் மனித உரிமைகளும் ஊடகத்துறையும் !

செய்தி - ஜனவரி, 24ம் திகதி, இலங்கை ஜனாதிபதித் தேர்தலுக்கு இரு தினங்களுக்கு முன், இரவில் தனது வீடு நோக்கி வந்த பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டுள்ளார். வீட்டினருகே நிறுத்தப்பட்டிருந்த இலக்கத் தகடற்ற வெள்ளை நிற வேன் ஒன்று அவரைக் கொண்டு போனதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    பிரகீத் எக்னெலிகொட பற்றித் தெரிந்துகொண்டீர்களானால் அவரது கடத்தலுக்கான காரணம் என்னவென உங்களுக்கு நான் சொல்லாமலேயே இலகுவாகப் புரியும். ஏற்கெனவே தர்மரத்தினம் சிவராம், லசந்த விக்ரமதுங்க மற்றும் பல ஊடகவியலாளர்களது விதி தீர்மானிக்கப்பட்டது எதனாலென நீங்கள் அறிவீர்கள்.

    பிரகீத் எக்னெலிகொட - இரு குழந்தைகளின் தந்தையான இவர் இலங்கையின் சுயாதீன ஊடகவியலாளர்களில் ஒருவராக,  'லங்கா ஈ நியூஸ்' வலைத்தளத்தில் அரசியல் கட்டுரைகளை எழுதிவருபவர். நாட்டின் மிக நெருக்கடியான சூழ்நிலைகளின் போதும் அரசியல் நிலைப்பாடுகள் குறித்துப் பகிரங்கமாக பல நூறு கட்டுரைகளும் குறிப்புக்களும் எழுதியதால், தைரியமான எழுத்துக்களுக்குச் சொந்தக்காரராகவும், வெளிப்படையான எழுத்தாளராகவும் அறியப்பட்டிருக்கிறார்.  இவர் இறுதியாக எழுதிய கட்டுரையானது வெளியாகிய இரு மணித்தியாலங்களுக்குள் உலகம் முழுவதிலிருந்தும் கிட்டத்தட்ட ஏழாயிரம் வாசகர்களால் வாசிக்கப்பட்டுள்ளது எனில் இவரது எழுத்துக்களின் காத்திரத்தன்மை உங்களுக்குப் புரியும்.

    இலங்கையிலிருந்து வெளிவரும் 'சியரட' பத்திரிகையின் ஆசிரியராக சில காலம் பணியாற்றிய இவரை இதற்கு சில மாதங்களுக்கு முன்பும் ஒரு முறை வெள்ளை வேனில் கடத்தி, இரும்புக் கொக்கியொன்றில் சங்கிலியால் கட்டி விசாரித்துப் பின் நடுவீதியில் போட்டுவிட்டுப் போயிருந்தார்கள். இவர் சமீபத்தில் நடந்த  ஜனாதிபதித் தேர்தலில் பிரதான வேட்பாளராகப் போட்டியிட்ட சரத் பொன்சேகா பற்றிய குறிப்புக்களோடு வெளியான '‘Secrets of winning a War’ எனும் ஆவணப்படத்தின் இணை தயாரிப்பாளராகவும் பணியாற்றியிருக்கிறார்.

    இலங்கையில் 'ஹோமாகம' எனும் பகுதியில் வசிக்கும் இவர் 'காணாமல் போயுள்ளமை' குறித்து இவரது மனைவி சந்தியாவால் முன் வைக்கப்பட்ட முறையீட்டை ஹோமாகம பொலிஸ் ஏற்றுக்கொள்ள மறுத்திருக்கிறது. சந்தியா, வெலிக்கட, தலங்கம ஆகிய பகுதிகளிலிருக்கும் பொலிஸ் நிலையங்களுக்கும் ஏறி இறங்கியிருக்கிறார்.

    இது நடந்து இரு தினங்களின் பின்னர் இவர் பணியாற்றிய 'லங்கா ஈ நியூஸ்' வலைத்தளம் இடைநிறுத்தப்பட்டது. இந்த மாதம் பெப்ரவரி முதலாம் திகதி இதன் ஆசிரியர் சந்தன சிரிமல்வத்த அரசியல் காரணங்களுக்காக கைதுசெய்யப்பட்டுள்ளார். அத்தோடு இரகசியப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ள விடுதலைப் புலிகளில் ஒருவரான கேபி அதாவது குமாரன் பத்மநாதன் தொடர்பான இரகசிய விசாரணைகளைப் பகிரங்கப்படுத்தி, அவ் விசாரணைகளுக்கு இடையூறு செய்த குற்றச்சாட்டில், 'லங்கா' எனும் பெயரில் வெளியாகும் ஞாயிறு வார இதழை தடுத்து நிறுத்தியதோடு அதன் அலுவலகத்துக்கும் அரசால் சீல் வைக்கப்பட்டுள்ளது.

    இது இவ்வாறிருக்க இலங்கையின் தேசிய தொலைக்காட்சி சேவையான ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் நிகழ்ச்சித் தயாரிப்பாளர் ரவி அபேவிக்ரமவை, தேர்தல் முடிவுகள் வெளியானதன் பிற்பாடு ஜனவரி 28 ஆம் திகதி காலை, தலைவர்கள் ஆரியரத்ன எத்துகல, தேவப்ரிய அபேசிங்க ஆகியோர் அவர்களது அறைக்குள் அழைத்து, சோமபால எனும் சாரதியைக் கொண்டு மிகவும் கொடூரமாக கைகளாலும், கால்களாலும் தாக்கியதாக அங்கு பணிபுரிபவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். தேர்தல் காலத்தின் போது பிபிசியின் இலங்கை பெண் ஊடகவியலாளரான தக்ஷிலா தில்ருக்ஷி ஜயசேனவும் தாக்கப்பட்டு அவரது பதிவுபகரணங்களும் திருடப்பட்டன.

    இலங்கையில், ஊடகத்துறையில் நேர்மையாகப் பணியாற்றுபவர்களின் நிலைமை இவ்வாறுதான் இருக்கிறது. பேனாவையோ, கேமராக்களையோ, விரல்களையோ அநீதிகளுக்கெதிராக உயர்த்தும்வேளை அவர்களது தலைவிதிகளும் தீர்மானிக்கப்பட்டு விடுகிறது. கடத்தப்படுவதும், காணாமல் போவதும், வதைக்கப்படுவதும், படுகொலை செய்யப்படுவதுமென பல இம்சைகள் இவர்களைத் தொடர்வதால், வெடிகுண்டுகளை செயலிழக்கச் செய்பவர்களைப் போல உயிருக்கு உத்தரவாதமின்றித்தான் இவர்கள் நடமாட வேண்டியிருக்கிறது. ஊடகவியலாளர்களை நண்பர்களாகக் கொள்ளவும் மக்கள் அஞ்சுகிறார்கள்.

    லசந்த படுகொலை செய்யப்பட்டு ஒரு வருடம் கழிந்த பிற்பாடும் அவரைக் கொலை செய்தவர்கள் யாரெனக் கண்டுபிடிப்பது அரசுக்கு இன்னும் சிரமமாக இருக்கிறது. அதுவும் பட்டப்பகலில், நடுவீதியில் வைத்து கொலை செய்துவிட்டுத் தப்பிச் சென்றிருக்கிறார்கள். கொலையாளிகள் இன்னும் உல்லாசமாகத் திரிந்துகொண்டிருக்கக் கூடும். அவர்களது அடுத்த இலக்கு தைரியமாக அநீதிகளை வெளிப்படுத்தும் இன்னுமொரு ஊடகவியலாளராக இருக்கலாம்.

    இலங்கையில் மனித உரிமை எனப்படுவது மக்களாலோ, ஊடகங்களாலோ கேள்விக்குட்படுத்தப்படவும் உரிமை கோரவும் முடியாத ஒன்றாக இருக்கிறது. சர்வதேச வலைத்தளங்களான ஃபேஸ் புக், ட்விட்டர் மற்றும் சொந்த வலைப்பூக்கள் போன்றவற்றில் இலங்கையின் அரசியல் நிலைப்பாடுகள் குறித்து தங்களது கருத்துக்களைப் பகிர்ந்துகொண்ட பலர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

    இலங்கையைப் பொறுத்தவரையில் நேர்மையான ஒரு ஊடகவியலாளர் உயிருடன் இருக்கவேண்டுமானால், அந்த மூன்று குரங்குகளைப் போல அநீதிகளைப் பார்க்காமல் கண்ணை மூடிக் கொண்டு, மக்களின் குறைகளைக் கேட்காமல் காதைப் பொத்திக் கொண்டு, அநீதிகளையும், மக்களது பிரச்சினைகளையும் பற்றிப் பேசாமல் (எழுதாமல்) வாயை மூடிக் கொண்டு மௌனமாக இருப்பதே உசிதம். எனினும் புதிது புதிதாக லசந்தகள் உருவாகிக் கொண்டே இருக்கிறார்கள் எழுத்திலும், இறப்பிலும் ஒன்றுபோலவே !

- எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை


நன்றி
# உயிர்மை
# Tamil Media
# Tamil Spy
# புதினம் நியூஸ்
# நிலாந்தன்

Wednesday, March 3, 2010

ஈழம் - ஆடப்படும் அரசியல் சதுரங்கம் !

(இந்தக் கட்டுரை இலங்கை ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் எழுதப்பட்டது)

    இந்த பெப்ரவரி மாதம் நான்காம் திகதி தனது 62 ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாட இருக்கிறது இலங்கை. கடந்தவருடம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் கொண்டாடப்பட்ட யுத்த தேசத்தின் இறுதி சுதந்திர தின விழா, இந்த வருடம் எந்த ஜனாதிபதியின் தலைமையில் நடைபெறப் போகிறதென இதை எழுதிக் கொண்டிருக்கும் இக் கணத்தில் (20.01.2010 அதிகாலை) தெரியவில்லை.
    காணக் கிடைக்கும் சுவர்கள் முழுதும், வாகனங்கள், மரங்கள் எதுவும் மீதமில்லாமல் சுவரொட்டிகளாகவும் பதாகைகளாகவும் ஜனாதிபதி வேட்பாளர்கள் புன்னகையோடு கை கூப்பி வணங்கி வாக்குக் கேட்டு இரந்து நின்றுகொண்டிருக்கிறார்கள். தேர்தலுக்கான வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்ததிலிருந்தே பிரதான வேட்பாளர்களாகக் கருதப்படுகின்ற தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும், ஜெனரல் சரத் பொன்சேகாவும் தங்களுக்கான விளம்பரங்களை ஆரம்பித்தாயிற்று. இவர்களது பிரச்சாரங்களுக்கு எல்லா ஊடகங்களையும் ஆக்கிரமித்துக் கொண்டு விட்டார்கள். தொலைக்காட்சி, வானொலி, இணையம், பத்திரிகை, துண்டுப் பிரசுரங்கள் போதாதென்று கைத்தொலைபேசிக் குறுந்தகவல்கள் வழியாகவும் வீடுகளுக்குள் எட்டிப்பார்க்கத் தொடங்கிவிட்டார்கள்.

    தொலைக்காட்சி விளம்பரங்களில் ஒப்பனை முகங்களாக வாக்குக் கேட்டுச் சிரிக்கையில் பரிதாபம் தோன்றச் செய்யும் இவர்கள், எதிர்க்கட்சி உறுப்பினர்களுடனான கலந்துரையாடல்களின் போது, தெருச்சண்டைகளை விடக் கேவலமான வார்த்தைப் பிரயோகங்களால் ஒருவரையொருவர் தாக்கிக் கொள்கையில், தொலைக்காட்சியைத் தூக்கி நிலத்திலடித்து விட்டு எங்காவது சுரங்கங்களுக்குள் போய் அமைதியாக ஒளித்துக் கொள்ளலாமா என்றிருக்கிறது. ஏன் ஒளித்துக் கொள்ளவேண்டுமென்ற கேள்வி உங்களுக்குள் எழுந்தால், இலங்கைக் கலைஞர்களின் ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரங்கள், அவர்கள் தங்களை ஒளித்துக் கொள்ளாததாலேயே என்பது உங்களுக்குத் தெரியாமலிருக்கும்.

    இலங்கையின் பிரபலமான திரைப்பட இயக்குனர்கள், நடிகர்கள், பாடகர்கள், இசைக் கலைஞர்கள் என அனேகமானவர்கள் தேர்தல் பிரச்சாரத்துக்கான விளம்பரங்களுக்காக அவர்களாக விரும்பியோ, பலவந்தமாகவோ விலைக்கு வாங்கப்பட்டிருக்கிறார்கள். அந்தக் கலைஞர்கள் ஒவ்வொருவரும் தாம் சொல்லும் ஜனாதிபதிக்கு வாக்களிக்க வைக்க வேண்டி, அரசியல் பிரச்சார கூட்ட மேடைகளில் ஏறியும் தொலைக்காட்சியில் தோன்றியும் தத்தமது ரசிகர்களிடம் வாக்குக் கேட்டு இரந்து நிற்கவேண்டியிருக்கிறது. தாம் உச்சத்தில் பார்த்து மகிழ்ந்த நட்சத்திரங்கள் தங்கள் தெரு வழியே, யாசகர்களைப் போல வாக்குகளை இரந்து கேட்டு வருகையில், எப்பொழுதாவது இவர்களை நேரில் காணக் கிடைக்குமா என்ற கனவிலிருந்த ரசிகர்கள் மனமிரங்கி தங்கள் வாக்குகளை அவர்கள் சொல்லும் ஜனாதிபதிக்கு அளிப்பார்கள் என்பது பின்னாலிருந்து தூண்டிவிடும் வேட்பாளரின் எண்ணமாக இருக்கலாம். ரசிகர்களின் கண்ணுக்குத் தெரியாத ஒரு சாட்டை, தெருக்கள், மேடைகள் வழியே அக் கலைஞர்களைத் துரத்திக் கொண்டிருக்கிறது.

    இத் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ தோற்றுவிட்டாரானால், அது அவரது தலையில் அவரே மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்டதாகத்தான் அமையும். அவரது ஆட்சிக் காலம் முடிய இன்னும் இரண்டு வருடங்கள் மீதமிருக்கிறது. ஈழத்தை வென்றெடுத்த இச் சமயம் இன்னுமொரு ஜனாதிபதித் தேர்தலையும் அறிவித்து, அதில் போட்டியிட்டால், எந்தப் போட்டியுமின்றி, ஈழத்தை வென்றெடுத்ததற்காகவே மக்கள் எல்லோரும் தனக்கே வாக்களித்து, தன்னை வெற்றியடைச் செய்வார்களென அவர் நினைத்தார். இதில் அவர் வென்றால் இன்னும் ஆறு வருடகாலத்துக்கு மீண்டும் அவர்தான் ஜனாதிபதி. குடும்பத்தவர்களைப் பிரதான பதவிகளில் அமர்த்தி மேலும் சொத்துக்கள் சேர்த்துக் கொள்ளலாம் என்பது அவரது எண்ணமாக இருந்திருக்கும். அதனாலேயே ஜனாதிபதித் தேர்தலையும் அறிவித்தார். தேர்தலை அறிவித்த பிற்பாடு வில்லங்கம் ஆரம்பித்தது. இவருடன் ஒன்றாக இணைந்து ஈழப் படுகொலைகளை வரைமுறையற்று செய்தழித்த, தமிழர்களை முள்வேலி முகாமுக்குள் நகர்த்திய இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தனது பதவியிலிருந்து இராஜினாமா செய்து, எதிர்க் கட்சியில் இணைந்து, மஹிந்தவுக்கு எதிராகப் போட்டியில் நிற்பதாக அறிவித்தார். இங்கு மஹிந்தவுக்கு புதிய தலைவலி ஆரம்பித்தது. வானில் பறக்கும் யானையின் வாலைப் பிடித்த கதையாக, வேறு வழியற்று தேர்தலைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கும் நிலைக்கு மஹிந்த ஆளாகியுள்ளார்.
    இராணுவத் தளபதியாகக் கடமையாற்றிய சரத் பொன்சேகா வந்து இணைந்துள்ள எதிர்க் கட்சியும் கடந்த 13 வருடங்களாக ஆளும் கட்சியாக மாறும் ஆசையோடு எதிர்க் கட்சியாகவே இருந்துவருமொன்று. பலவீனமுற்றுக் கிடந்த அது, தன் பக்கமாக வந்த சரத் பொன்சேகாவினால் புத்துயிர் பெற்று நிமிர்ந்து நிற்கிறது இன்று. சரத் பொன்சேகா, இந்த நாட்டின் மக்கள் பிரச்சினைகளை ஆயுதங்களால்தான் முடிவுக்குக் கொண்டுவரலாமென்ற எண்ணத்தோடு, ஆயுதங்களைப் பாவித்து, தங்கள் உரிமைகளைக் கேட்டுக் கொண்டிருந்த இலட்சக்கணக்கான தமிழர்களைக் கொன்றொழிக்கவும், அழிக்கவும் ஒன்றிணைந்த பிரதானமானவர்களில் ஒருவர். 'இந் நாடு, சிங்களவர்களுக்கே உரியது. சிறுபான்மையினர் சிங்களவருக்குக் கீழ்படிந்து நடந்துகொள்ள வேண்டும்' என பகிரங்கமாகவே அறிவித்தவர். கடந்தகாலங்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுக்கு, அரசியல் துஷ்பிரயோகங்களுக்கு மஹிந்த ராஜபக்ஷேவுக்கு எந்தளவு பங்கிருக்கிறதோ, அதே அளவு பங்கு சரத் பொன்சேகாவுக்கும் இருக்கின்றது. இங்கு மக்களுக்கு விரும்பியோ விரும்பாமலோ இரண்டு கொலைகாரர்களில் ஒரு கொலைகாரரைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்புத்தான் இன்று உள்ளது.

    பிரதான வேட்பாளர்கள் இருவருக்குமே வாக்குக் கேட்க, தம் மக்களை ஈர்க்க பலமான ஒன்று கிடைத்திருக்கிறது. அது ஈழப் போராட்டம் முடிவுக்கு வந்தமை. இலங்கையில் நிலவிவந்த அசாதாரண யுத்த சூழலை, ஈழப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவந்து இலங்கையில் அமைதியையும் ஒற்றுமையையும் நிலைநாட்டியது தாம்தானென இரு வேட்பாளர்களுமே மார்தட்டி நின்று வாக்குக் கேட்கிறார்கள். பல வருடங்களாக நடந்த ஈழப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர முடியாமல் தவித்த அத்தனை ஜனாதிபதிகளுக்கிடையில் தான் தான் அந்தப் போராட்டத்தை, தனது மகனையும் களத்துக்கனுப்பிப் போரிடச் செய்து முடிவுக்குக் கொண்டு வந்ததாக மஹிந்தவும், ஈழப் போராட்டத்தின் ஆரம்பம் தொட்டெ இலங்கை இராணுவத்தில் கடமையாற்றி, வியூகங்கள் வகுத்து, யுத்தகளத்தில் நின்று போராடி, காயப்பட்டு ஈழப்பகுதியை திரும்ப இலங்கைக்கு மீட்டுக் கொடுத்தது தான் தானென சரத்தும் சொல்லிச் சொல்லி வாக்குக் கேட்கிறார்கள். ஒரு வகையில் இது இருவருமே தரும் வாக்குமூலம். பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களை வதைப்படுத்திக் கொன்றொழித்ததுவும், அவர்கள் உரிமைகளை, நிலங்களை அபகரித்துக் கொண்டதுவும் தாம்தானென இருவருமே வெளிப்படையாக ஏற்றுக் கொள்கின்றனர். தட்டிக்கேட்க உலகில் எவருமே இல்லாதிருக்கின்றனர்.

    இருவர் வாயிலும் மெல்லப்படும் அவலான இன்றைய ஈழம் எப்படியிருக்கிறது? அவர்கள் சொல்கிறபடி போர் ஓய்ந்திருக்கிறது. ஆனால் அவலங்கள் முடிவுக்கு வந்துவிட்டதா? இல்லை. அவலங்கள் முடிவுக்கு வந்துவிட்டதாக அவர்கள் சொல்லிக் கொண்டிருந்தாலும் முற்றுமுழுதாக அவலங்கள் முடிவுக்குக் கொண்டுவரப்படவில்லை. அவை உலகுக்கு வெளிக் காட்டப்படுவதில்லை. அவ்வளவே. தமிழ் மக்கள் எல்லோரும் முள்வேலி முகாமிலிருந்து தற்பொழுது தத்தம் ஊர்களுக்கு மீள் குடியேற்றங்களுக்காக அனுப்பப்படுவதாக அரச தொலைக்காட்சி காட்டுகிறது. தனது ஊர்களுக்குச் சென்று, செழித்துக் குலுங்கும் திராட்சைத் தோட்டத்தின் மத்தியில் நின்று, தாம் இப்பொழுது தமது ஊர்களில் மீளக் குடியமர்ந்து மிகவும் நிம்மதியாகவும் மகிழ்வாகவும் இருப்பதாக தன்னை நோக்கி நீட்டப்படும் தொலைக்காட்சி ஒலிவாங்கிக்குச் சொல்லும் தமிழ் விவசாயியின் விழிகள் கலங்கியிருக்கின்றன.

    இரவு 11 மணிக்கு கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்கும், முற்பகல் 11 மணிக்கு யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்குமாக நேரடி பஸ் பிரயாணங்கள் கூட தற்பொழுது ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றன. இன்னும் சில மக்கள் முள்வேலி முகாமிலிருந்து மீள்குடியேற்றங்களுக்காக தத்தமது ஊர்களுக்கு அனுப்பப்பட்டிருக்கிறார்கள். யுத்தத்தில் பாதிப்புற்றிருக்கும் எல்லா மக்களுக்கும் கூட வாக்காளர் அட்டைகள் போய்ச் சேர்ந்துவிட்டன. ஆனால் அவர்களிடும்(?) வாக்குகளை வைத்து, ஈழ மக்களுக்குப் பிடித்தமான ஜனாதிபதி யாரென்பதை இனங்கண்டு கொள்ளமுடியாது. பதிவியேற்கப்போகும் ஜனாதிபதி அவர்களுக்குப் பிடித்தமானவர் என்ற முடிவுக்கும் வர இயலாது. அவர்கள் இழந்துவிட்டதாகச் சொல்லப்படும் தலைவரை யாராலும் ஈடு செய்யவே முடியாது.

    இலங்கை முழுதும், விடுதலைப் புலிகள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் குறித்து வெளிப்படையாகப் பேச எல்லோரும் அஞ்சுகிறார்கள். எல்லோருக்குள்ளும் ஏதோ ஒரு ஓவியம் போல அவர் இருக்கக் கூடும். ஆனால் அந்தச் சித்திரம் குறித்து எல்லோருமே விவரிக்கத் தயங்குகிறார்கள். தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில், அந்த ஓவியத்தைப் பின் தள்ளிவிட்டு, எதிர்நோக்கும் வாழ்க்கைப் பிரச்சினைகளுக்கும் விலைவாசி உயர்வுகளுக்கும் முகம்கொடுக்க முயன்று கொண்டிருக்கிறார்கள். யுத்தமானது முழுவதுமாக ஓய்ந்துவிட்டதெனச் சொல்லப்பட்டாலும், பூவும்,பொட்டும் வைத்துக் கொண்டு, தமிழ்ப் புத்தகங்களைச் சுமந்துகொண்டு தலைநகர் தெருக்களில் நடமாடும் அச்சம் இன்னும் தமிழர்களிடத்தில் இருக்கிறது. காணாமல் போனவர்கள், கடத்தப்பட்டவர்கள் என இன்னும் மீட்கப்படாதோர் நிறையப் பேர் இருக்கிறார்கள். சிறைச்சாலைகள் சந்தேகத்துக்குரியவர்களெனக் குற்றம் சாட்டப்படும் தமிழர்களால் தொடர்ந்தும் நிரம்பிக் கொண்டேதான் இருக்கின்றன.

    யுத்த பிரதேசத்து மக்கள் சிலரிடம் கதைத்ததில், அவர்களது வெறுப்பானது இந்தியா மேலிருப்பதையும் புரிந்துகொள்ள முடிகிறது. பெரும் நம்பிக்கையோடு தங்களைக் காப்பாற்றச் சொல்லிக் கையேந்திய வேளை நிராகரிக்கப்பட்ட துயரமும் ஏமாற்றமும் அவர்களது மனங்களில் என்றும் ஆறா ஆழப் புண்ணாகியிருக்கிறது. இன்னும் தங்களை வைத்து அரசியல் நடத்தும் இந்திய அரசியல்வாதிகளின் மேலுள்ள கோபம் வார்த்தைகளில் கொந்தளிக்கிறது. பலருடன் கதைத்ததில் ஒன்றைப் புரிந்துகொள்ள முடிகிறது. ' எங்கள் வாழ்க்கைதான் அவர்களை நம்பி ஏமாந்துபோயிற்று. தனி ஈழம், தனி ஈழமெனவும் ஈழ மக்கள் அது இதென்றும் இன்னும் மேடைகளில் கூச்சலிடுபவர்களிடம் ஒன்றே ஒன்றுதான் கேட்டுக் கொள்ளவேண்டியிருக்கிறது. கடல் கடந்து தொலைவில் இருக்கும் எங்களிடம் இனி காப்பாற்றிக் கொள்ள ஏதுமில்லை. இப்படியே எப்படியும் வாழ்ந்துவிட்டுப் போகிறோம். அங்கு உங்களையே நம்பி வந்திருக்கும் எங்கள் அகதி மக்களை, புலம்பெயர்ந்த எங்களூர் மக்களை நல்லபடியாக வாழச் செய்யுங்கள். அவர்களது அடிப்படைத் தேவைகளையாவது நிறைவேற்றிக் கொடுத்து, நல்ல தொழில் பெற்று உழைக்க வசதி செய்துகொடுங்கள். அவர்களது பிள்ளைகளுக்கு கல்வி வசதி செய்துகொடுங்கள். இவை எதுவுமில்லாமல் வாடும் இலங்கை அகதிகள் பலரும் இந்தியாவில் இன்னும் இருக்கிறார்கள். ஈழ மக்கள் மேல் உண்மையான அக்கறை இப்போதும் இருந்தால் இவற்றை முதலில் செய்யுங்கள்' என்பதே பலரதும் கோரிக்கையாக இருக்கிறது.

    இன்றைய இலங்கையைப் பொறுத்தவரையில் தேர்தல் வன்முறைகள் பரவலாக நடைபெறுகின்றன. தேர்தல் கலவரங்களில் பலரும் கொல்லப்பட்டிருக்கிறார்கள். ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டிருக்கிறார்கள். ஆங்காங்கே தத்தமது தலைவர்களுக்காக அடித்துக் கொள்கிறார்கள். தேர்தல் வாக்குறுதிகள் நிறைந்த காற்று செல்லும் இடங்களிலெல்லாம் மக்கள், தேர்தல் குறித்தே கதைத்துக் கொள்கிறார்கள். அடுத்த ஜனாதிபதி வந்து தங்கள் வாழ்க்கையை வளம் மிக்கதாக்குவார்களென தேவதைக் கதையை நம்பும் குழந்தைகள் போல பெரும்பான்மை இன மக்கள் நம்பிக் கொண்டிருக்கையில், அடுத்த ஜனாதிபதி குறித்து சிறுபான்மை மக்களிடம் ஒரே ஒரு கருத்துத்தான் நிலவி வருகிறது. அது,

    'ராமன் ஆண்டாலென்ன ராவணன் ஆண்டாலென்ன, எங்கள் நிலைமை ஒன்றுதான்'.

- எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை
20-01-2010


நன்றி
# வடக்குவாசல் இதழ், பெப்ரவரி 2010