Tuesday, May 16, 2017

உலக சினிமா களஞ்சியம்

 
            உலக சினிமா ஆர்வலர்கள் ஒன்றைப் புரிந்து வைத்திருக்கிறார்கள். இணையமும், நவீன தொழில்நுட்ப வசதிகளும் வீட்டிற்கே வந்து விட்ட பிறகு, நல்ல தரமான உலகத் திரைப்படங்களைத் தேடித் தேடிப் பார்க்கிறார்கள். நானும் விதிவிலக்கல்ல. எங்கெல்லாம் நல்ல திரைப்படங்களைப் பற்றிய குறிப்புக்களை வாசிக்க நேர்கிறதோ, எனது அலைவரிசைக்கு ஒத்துவரக் கூடிய திரைப்படமாகக் காண்கிறேனோ, உடனடியாக அதைத் தேடிப் பிடித்துப் பார்த்து விடுகிறேன்.

             தமிழ் ஊடகங்களில் அநேகமானவை வெறுமனே தமிழ்த் திரைப்பட விமர்சனங்களையும், அவற்றுக்கான புள்ளிகளையும் இட்டு பெருமைப்பட்டுக் கொள்வதோடு நின்று விடுபவை. தமக்குப் பிடித்த நடிகர்கள், இயக்குனர்கள் மீதான ஆராதனைகளோடு, தமக்கு ஒரு சதம் கூடப் பயனற்ற வசூல் சாதனை விபரங்களை பெருமையோடு பகிர்ந்து கொள்ளும் மூளையும், புத்தியும் மழுங்கிய வெறி கொண்ட ரசிகர்கள்தான் முகநூலிலும் தெருவுக்குத் தெரு நின்று கொண்டு பல்லிளிக்கிறார்கள் அல்லது முறைக்கிறார்கள். யதார்த்தத்தில் அவர்களிலிருந்து தப்புவதுதான் பெரும்பாடாக இருக்கிறது.

            இப்படியான இன்னல்களிலிருந்தும், தொந்தரவுகளிலிருந்தும் தப்பி, உலகில் வெளிவரும் நல்ல திரைப்படங்களைப் பார்க்க நிறையத் தேட வேண்டியிருக்கிறது. முன்பெல்லாம் அதற்கென்றே அநேகமான நேரம் செலவாகும். அண்மையில் சிவசங்கர் எனும் நண்பர் ஒருவர், என்னை ஒரு முகநூல் குழுமத்தில் இணைத்து விட்டிருந்தார். 'World Movies Museum' எனும் அக் குழுமத்தையும் வழமையாகக் காணும் சாதாரணமான ஒரு குழுமமாகக் கருதி, உள்ளே சென்று பார்த்தால், எனது கருதுகோளை அப்படியே சிதறடிக்கச் செய்துவிட்டது குழுமத்தின் நேர்த்தியும், படைப்புக்களும்.

            தாம் பார்த்த, உலகம் முழுவதிலிருந்தும் வெளிவரும் நல்ல திரைப்படங்களைக் குறித்து குழும நண்பர்கள் பகிர்ந்து கொள்கிறார்கள். விவாதிக்கிறார்கள். ஆரோக்கியமான விவாதங்களாக அவை இருக்கின்றன. இக் குழுமத்தில் நல்ல பதிவுகளை மாத்திரம் பதிவிடுவதால் நம்பகத்தன்மையோடு அனைத்து நண்பர்களுக்கும் பரிந்துரைக்க முடிகிறது. உலக சினிமா ஆர்வலர்கள் நிச்சயம் இணைந்து கொள்ளலாம். இந்தக் குழுமம் ஏமாற்றவில்லை. நேரத்தை வீணடிக்கவில்லை. புதிய பதிவுகளை தினந்தோறும் தந்துகொண்டே இருக்கிறது.

           இனியும் இவ்வாறே தொடரட்டும் என்ற வாழ்த்துக்களோடும், அன்போடும்...

எம்.ரிஷான் ஷெரீப்
16.05.2017
mrishanshareef@gmail.com

Thursday, May 4, 2017

வீட்டை விட்டு ஓடும் ஜீவிதம் - எம்.ரிஷான் ஷெரீப்


     எழுத்தாளர் ஜெயமோகனின் இணையத்தளத்தில் ‘கிளம்புதலும் திரும்புதலும்’ மற்றும் ‘கிளம்புதல் - ஒரு கடிதம்’ ஆகிய கடிதங்களை வாசித்தேன். ‘வீட்டை விட்டுப் போய்விடுதல்’ அல்லது ‘விட்டுப் போய் விடுதல்’ என்பது எவ்வளவு சுதந்திரத்தை அளிக்கிறதோ அந்தளவு துயரத்தையும் அகத்தே கொண்டிருக்கிறது என்பதைத்தான் மறைவாகக் குறிப்பிடுகின்றன அவை.

     ‘கிளம்புதல்’ கடிதம் தந்த அதிர்ச்சியிலிருந்து மீள சில கணங்களாயிற்று. தனது பட்டமளிப்பு விழாவுக்கு அப்பாவை வர வேண்டாமெனச் சொல்லி சண்டை போட்ட மகனின் சூழ்நிலை தெரியவில்லை. ஆனால் அந்தத் தடை அப்பாவின் மனதை எவ்வளவு தூரம் பாதித்திருக்கும்? அதிர்ச்சியும், அவமானமும், துயரமும், சுய பச்சாதாபமும் அன்று அவரை எந்தளவு தாக்கியிருக்கும் என்பதை இன்னுமொரு தகப்பனாலேயே புரிந்து கொள்ளக் கூடியதாகவிருக்கும். தினந்தோறும் புதுப்புது அறிமுகங்களும், விடயங்களும் கையருகே வந்து கொண்டேயிருக்கையில் பதின்ம வயது இளைஞர்கள் பொதுவாகவே பெற்றோரை சற்று தள்ளி வைக்கவே விரும்புகிறார்கள் போலும். நிஜத்தில் பெற்றோரின் அருமையை அவர்களை இழந்து நிற்பவர்களால்தான் பூரணமாக புரிந்து கொள்ள இயலுமாக இருக்கும்.

     ‘கிளம்புதலும் திரும்புதலும்’ கடிதத்தில் “தம்பி அன்னைக்கு எங்கடா போன?” என்ற ஒரு கேள்வி அம்மாவிடமிருந்து வந்திருப்பதை வாசித்தேன். இலகுவாகத் தாண்டிச் செல்லக் கூடிய கேள்வியல்ல அது. அவ்வாறான ஒரு கேள்வியை எவ்வாறு புறக்கணித்துக் கடந்து செல்ல முடியும்? அதற்கான பதிலில்தான் பிள்ளைக்கு அம்மாவின் அவசியமும், அவர் மீது வைத்துள்ள பாசமும், விட்டுச் செல்லும் அளவிற்கு அம்மாவை விடவும் முக்கியமான எது புறத்தே இருக்கிறது என்பதுவும் புலப்படும் இல்லையா?


    இலக்கியத்துக்கான நோபல் பரிசும், புலிட்ஸர் விருதும் வென்ற பெண் எழுத்தாளர் Pearl Sydenstricker Buck (Pearl S.Buck) எழுதிய ‘Letter from Peking’ நாவலை தமிழில் மொழிபெயர்த்துக் கொண்டிருக்கிறேன். ‘கிளம்புதலும் திரும்புதலும்’ மற்றும் ‘கிளம்புதல்’ ஆகிய கடிதங்களைப் போல இதுவும் ஒரு கடிதம்தான். ஆனால் மிக நீண்ட ஒரு கடிதம். ஒற்றையில் வசிக்கும் அம்மாவைப் புறக்கணித்து வீட்டை விட்டுச் செல்லும் மகன் குறித்த அம்மாவின் உணர்வுகள் பற்றி எழுதப்பட்டிருக்கும் நாவல் இது. நமது இலங்கை, இந்தியத் தாய்மார்களோ, தந்தையர்களோ தமது பிள்ளைகளைக் குறித்து வெளிப்படையாகச் சொல்லாத உணர்வுகளை ஒரு தாயின் பார்வையில் இந்த நாவல் கொண்டிருக்கிறது. அதன் ஒரு பகுதியை இங்கு தர விரும்புகிறேன்.
******
     மகன் ரெனீ வீட்டுக்கு வந்துவிட்டான். நான் தேடியலையாத போது, எனது இதயம் அமைதியாக இருக்கும்போது, நான் பொறுமையில் மூழ்கியிருக்கும்போது, தொடர்ந்தும் வேண்டுதல்களை விடுக்காதவிடத்து, இறுதியாக இப் பிரபஞ்சத்தின் தேவ பிடிவாதம் எனக்கு உபகாரம் செய்திருக்கிறது. அவன் முன் தினமிரவு வந்திருந்தான். நான் உறக்கத்திலிருந்த போதும், வீட்டில் எழும் சிறிய சப்தத்துக்குக் கூட விழித்து விடுவேன். கதவு, அதாவது சமையலறைக் கதவு திறக்கப்படும் சப்தம் எனக்குக் கேட்டது. நான், தனியாக இருப்பதனால் வழமை போலவே அதற்கு பூட்டு போட்டிருந்தேன். ரெனீயிடம் அல்லாது வேறு எவரிடமும் அதற்கான சாவி இல்லை. அதனால், கதவைத் திறந்தது ரெனீதான் என்பதை அறிந்து கொண்டேன். குளிர்சாதனப் பெட்டியைத் திறந்து மூடும் சப்தம் அதனைத் தொடர்ந்து எழுந்தது. அந்த ஓசையும் எனக்குக் கேட்டது. நான் என்ன செய்ய வேண்டும்? கட்டிலிலிருந்து எழுந்து, கீழ்த் தளத்துக்கு ஓடிச் சென்று அவனைக் கட்டியணைத்துக் கொள்ள வேண்டுமென எனக்குத் தோன்றியது. எனினும் எனது தனிமைக்குள்ளிருந்த எனது எச்சரிக்கையுணர்வு விழித்துக் கொண்டது.

     அவன் ஒரு தடவை வீட்டை விட்டுச் சென்று விட்டான். மீண்டுமொரு தடவை வீட்டை விட்டுச் சென்று விடுவது அவனுக்கு இப்போது இலகு. அவன் நானில்லாது வாழக் கற்றுக் கொண்டு விட்டான். வீட்டைத் தாண்டி வெளியே ஜீவிக்கக் கற்று விட்டான். நான் கீழ்த் தளத்துக்குச் செல்ல வேண்டியதில்லை. நான் உறக்கத்திலிருப்பேன் என எண்ணிக் கொள்ள  அவனுக்கு இடமளிக்க வேண்டும். காலையில் அவனால் எனக்கு வியப்பூட்ட முடியும். நானும் வியப்படைந்ததாகக் காட்டிக் கொள்வேன். இவ்வாறாக பால்ய வயதுப் பிணைப்பு ஒரு முடிவுக்கு வந்திருக்கிறது.

     நான் அசையாது, சலனங்களை ஏற்படுத்தாதிருந்தேன். தரையில் கால் வைக்கவில்லை. படுக்கையிலேயே சாய்ந்து படுத்திருந்தேன். மெல்லிய நிலா வெளிச்சம் போர்வையின் மீது வீழ்ந்திருந்தது. நான் செவிமடுத்துக் கொண்டேயிருந்தேன். அவன் உள்ளறை மேசையருகில் அமர்ந்து உணவருந்தினான். எனக்கு பீங்கான் உரசும் ஒலியும், இழுக்கப்படும் கதிரையின் ஓசையும் கேட்டது. அரை மணித்தியாலம் அல்லது அதை விட சற்று கூடுதலான நேரமெடுத்து அவன் சாப்பிட்டான். தொடர்ந்து எனக்கு குளியல் தொட்டியில் தண்ணீர் விழும் ஓசை கேட்டது. நான் எழுந்து விடுவேன் என எண்ணி அவன் அறைக் கதவை பாதி மாத்திரமே திறந்திருந்தான். எனில், அவனுக்கு என்னை எழுப்புவது அவசியமில்லை. நான் புத்திசாலித்தனமாகவே முடிவெடுத்திருக்கிறேன். நான் அவனது அறைக்குச் செல்லத் தேவையில்லை. அவன் உறக்கத்திலிருக்கிறானா எனப் பார்க்க, எட்டிப் பார்க்க வேண்டியதுமில்லை. எனினும் ஓஹ்! அவன் மீண்டும் வீடு திரும்பி விட்டதற்காக எந்தளவு நன்றி செலுத்த வேண்டும்? எனது இதயம் எனது நெஞ்சுக் கூட்டிலிருந்து வெளியே வந்து நன்றி கூறுவதற்காக சுவனத்துக்குச் செல்வதைப் போல உணர்ந்தேன். இறைவனுக்கு நன்றி! இறைவனுக்கு நன்றி!

     அனைத்துமே அமைதியாகி விடும்போது என்னால் உறங்கி விட முடியும். அவன் எப்படியிருக்கிறான் என்பதை அறிந்து கொள்ள முன்பு, எனக்கு எப்படி உறக்கம் வரும் என என்னை நானே கேட்டுக் கொண்டேன். எனினும் நான் அவனைப் பார்க்கச் செல்ல மாட்டேன். அவன் தனது படுக்கையில் படுத்திருந்த போதிலும், எனது அறைக்குப் பக்கத்து அறையில்தான் அவனிருந்த போதிலும், இக் கணத்தில் அவன் என்னை விட்டும் தூரமாகவே இருக்கிறான். எனது மகனுக்கும் எனக்குமிடையே ஒரு சுவர் உருவாகியிருக்கிறது. அவன் வளர்ந்த மனிதனாக ஆகி விட்டான் என்பதை நான் அறிந்திருந்தேன். இனி அவனுக்கு நான் யாராக இருப்பது அவசியம் என அவன் என்னிடம் கூறும்வரை நான் பார்த்திருக்க வேண்டும்.

     சிலவேளை அவனுக்கு தாயின் அவசியமிருக்காது, சிலவேளை அவனுக்கு சிநேகிதம் மாத்திரமே தேவையானதாக இருக்கும். வயதான தோழி. ஒரு காலத்தில் அவனுக்குத் தாயாக இருந்தவளிடமிருந்து அவன் எதிர்பார்ப்பது அதுவாக இருக்கக் கூடும்.

     ஒரு மணித்தியாலம் மெதுவாக நகர்ந்து செல்லும்வரை நான் காத்திருந்தேன். பல மணித்தியாலங்கள் கழிந்திருக்கும் என கட்டிலின் அருகிலிருந்த மேசையின் மீது வைக்கப்பட்டிருந்த கடிகாரத்தை நான் பார்க்கும்வரை நினைத்துக் கொண்டிருந்தேன். ஒரு மணித்தியாலமும், பத்து நிமிடங்களும் மாத்திரமே கழிந்திருந்தது. தொடர்ந்து கதவின் பிடியை மெதுவாகச் சுழற்றும் சப்தம் கேட்டது. நான் அசையாது படுத்திருந்தேன். விளக்கையும் ஏற்றவில்லை. அவனது பழைய சிவப்பு நிற குளியல் ஆடையை அணிந்து, வாசலருகில் அவன் நின்று கொண்டிருந்ததை நான் கண்ட போது, அவன் ஒருபோதும் வீட்டை விட்டுச் செல்லாததைப் போல இயல்பாக நான் கதைத்தேன்.

     'இது நீயா ரெனீ?'
     அல்லாது வேறு யாராக இருக்க முடியும்? அவன் இலகுவாக பதிலளித்தான்.
     'எவ்வாறிருக்கிறீர்கள் அம்மா?'
     'நன்றாக இருக்கிறேன். நீ இப்போதுதான் வந்தாயா?'
     'நான் கீழ்த் தளத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன்.'
     அவன் கட்டிலருகே வந்து கட்டிலின் ஒரு மூலையில் அமர்ந்தான். நிலவொளியில் நாம் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டோம்.
     'மின்விளக்கை ஏற்றட்டுமா?' எனக் கேட்டேன்.
     'வேண்டாம். உங்களுக்கு உறங்கத் தேவையில்லையென்றால் நாங்கள் இவ்வாறே அமர்ந்திருப்போம். நான் உங்களை எழுப்பி விட்டேனா?' என்றான்.
     தூக்க மயக்கம் போலக் காட்ட முற்பட்டவாறு,
     'ஆமாம். அதற்குப் பரவாயில்லை. நான் முன்பு பழகியிருந்ததைப் போல, இப்போது விடிகாலையில் எழுந்து விடுவதில்லை. பணியாள் மெட் பால் கறந்து தருவான்' என்றேன்.
     'அனைத்தும் ஒழுங்காக நடைபெறுகிறதா?' எனக் கேட்டான். நான் வேறொன்றைப் பற்றிக் கூறினேன்.
     'நான் கறுப்பு ஆடுகள் இரண்டினையும், வெள்ளை ஆட்டுக் குட்டிகள் இரண்டையும் வாங்கினேன். ஆகவே எனக்கு தோட்டத்தில் புல் வெட்ட வேண்டிய தேவையில்லை.'
     'நிலவு வெளிச்சத்தில் நான் அவற்றைக் கண்டேன்.'

     பிறகு எமக்கிடையில் இன்னும் கதைக்கத் தேவையான எதுவுமில்லையெனத் தோன்றியது. எனது இதயக் கூட்டிலிருந்து எந்தக் கேள்வியும் வெளியே பாய நான் இடம் கொடுக்கவில்லை. அவன் என்னிடம் எதைக் கூறத் தயாரானாலும், பதிலாக நான் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும். எனினும் அவன் அடுத்ததாக என்ன சொல்லக் கூடுமென நான் அறியேன். 

     'நான் எங்கிருந்தேன் என அம்மா என்னிடம் கேட்கவே இல்லையே அம்மா?'
******

    வீட்டை விட்டு ஓடி விடுபவர்களால் பாரம்பரிய வீடுகளையும்  இலகுவாக நேசித்து விட முடிவதில்லை. வீடுகளின் ஓரோர் அணுக்களும் வசித்தவர்களினதும், வந்து சென்றவர்களினதும் கதைகளைச் சுமந்த வண்ணம் அசையாது வீற்றிருக்கின்றன. அவற்றின் அழுத்தத்தைத் தாங்க முடியாதவர்கள் அவற்றைத் தாண்டி எங்காவது ஓடி ஒளிந்து கொள்ள முற்படுகிறார்கள். அதை இலகுவாகத் தாண்டிச் செல்ல முடிந்தவர்களால் ஒருபோதும் நிம்மதியாக இருந்து விட முடியுமெனத் தோன்றவில்லை. கடலூர் சீனுவினதும், சுரேஷ் பிரதீப்பினதும் கடிதங்கள் இதைத்தான் குறிப்பிடுகின்றன.

     என்னால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட சிங்கள மொழி பெண் கவிஞர் தக்‌ஷிலா ஸ்வர்ணமாலியின் கீழுள்ள கவிதையைப் பாருங்கள். பெற்றோரை இழந்த தன்னை வளர்த்த பாட்டியையும், தான் வாழ்ந்த பாரம்பரிய வீட்டையும் விட்டுப் போன இளம்பெண்ணின் ஏக்கத்தை கவிதையில் நிரப்புகிறார். அந்த வீட்டில் பாட்டியுடன் வாழ்ந்த காலங்களை மீண்டும் யாசிக்கிறார்.

மெல்லிய விடிகாலைப் பனி

பாரம்பரிய வீட்டில் தனித்து மீதமான
ஒற்றைப் பாட்டியின் மடியலமர்ந்து
நாட்டார் கதைகளை காது நிறையக் கேட்டிருக்க,
தென்னை ஈர்க்கில் குச்சிகள் கொண்டு
கூட்டிப் பெருக்கிய பெருவீட்டு முற்றத்தினோரம்
வெண்ணிறப் பூக்கள் நிரம்பிய மரத்தின் கீழமர்ந்து
உதிர்ந்த பூக்களைச் சேகரித்துச் சேகரித்து மாலை கோர்க்க,
பாட்டியின் வண்ண வண்ணப் பூக்கள் நிறைந்த
சீத்தைத் துணியைப் போர்த்தி
மழை பெய்யும்போது வானம் பார்த்தவாறு
சாலையில் அமர்ந்திருக்க
எவ்வளவு விரும்புவேன் நானென
யாரும் அறிய மாட்டார்கள்
பாட்டியைத் தவிர.


இரு கைகள் கோர்த்தும் அணைத்திட முடியா
பெருந் தூண்கள் இருக்கும்,
பாட்டி எப்போதும் தனித்தே பெருக்கித் துடைக்கும்
பாற்தூய்மை வெள்ளையென வெளுத்த
பரிசுத்தமான பாரம்பரிய வீட்டுக்கு
வேறு யாரோ வருகிறார்களாம் குடியிருக்க
இன்று, நாளைக்குள்.


எனக்கு என்னைத் தெரிந்த அளவிற்கு என்னை அறிந்த,
யாராலும் புரிந்து கொள்ள முடியாத என்னை உணர்ந்த
பாட்டியின் தனிமைக்கு
என்னை விடப் பெறுமதியான யாரேனும் உண்டோ


வருபவர்கள் என்னளவிற்கு விரும்புவரோ பாட்டியின்
வெண்ணிறப் பூக்களை ஒத்த பேரழகான
நரைத்த கூந்தல்கற்றைகளை


மெல்லிய அதிகாலைப் பனியை எனக்களித்த மேகமே
வேண்டாம் எனைக் கரைத்து மழையாய்ப் பெய்ய

******

     பெற்றோரையும், வீட்டையும் புறக்கணிப்பவர்களுக்கு இவ்வாறான  ஏக்கங்களும், இவை தரும் வலியும் வாழ்நாள் முழுவதும் சுமையாக அழுத்திக் கொண்டேயிருக்கும் அல்லவா? இருக்கும் ஒற்றை ஜீவிதத்தில் நமக்குப் பிடித்ததை மாத்திரமே செய்து விடாது, கூட இருந்து நம்மை நேசிக்கும் சக ஜீவன்கள் குறித்தும் ஒரு கணமேனும் சிந்தித்தால் ஒவ்வொரு நாளும் இனிமையானதாக மாறும். புறக்கணிப்புக்கள் தூர்ந்து விடும். விட்டு விலகி ஓடுதல் என்பதற்கான வாய்ப்புக்களே இல்லாமலாகும். அதுதான் ஜீவிதம். அவ்வாறு வாழ்வதுதான் வாழ்க்கை.

- எம்.ரிஷான் ஷெரீப்

Friday, March 24, 2017

அசோகமித்திரன் எனும் இலக்கிய ஆளுமை

எழுத்தாளர் அசோகமித்திரனின் தொகுப்புக்கள் அக் கால எனது கிராமப் பாடசாலை நூலகத்தில் நிறைய இருந்தன. எனது ஆரம்ப கால வாசிப்புக்கள் அவருடையதாக இருந்தன. ஒரு நாட்டில் வெளியிடப்பட்ட நூல்கள், இன்னுமொரு நாட்டின் ஒரு மூலையிலிருந்த கிராமத்து நூலகம் வரை சென்றிருக்குமாயின், அவரது எழுத்தின் பரவலான வீச்சு அக் காலத்திலும் எவ்வளவு காத்திரமானதாக இருந்திருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளக் கூடியதாக இருக்கிறது.


எனக்குப் பிடித்த இலக்கிய ஆளுமைகளுள் ஒருவரான எழுத்தாளர் அசோகமித்திரன் அவர்கள், எனது முதலாவது மொழிபெயர்ப்பு நாவலை வெளியிட்டு வைத்ததுவும், வாசகர்களுக்கு எனது தொகுப்புக்களில் கையெழுத்திட்டுக் கொடுத்ததுவும் எனது வாழ்வில் பெற்ற பெரும்பேறுகளில் ஒன்றாகக் கருதுகிறேன். அவருடனான இனிய நிகழ்வுகளைப் பகிர்ந்து கொள்ள உத்தேசித்து அந்த நிகழ்வின் புகைப்படங்கள் சில கீழே.


  

 

 

 

 

நேற்று அவரை இழந்துவிட்டோம் என்ற தகவல் பெரும் உளத் துயரைக் கொண்டு வந்திருக்கிறது. இழப்பு என்பது இலகுவானதா என்ன? எப்படியாவது அதைத் தாண்டிச் செல்ல வேண்டியிருக்கிறது. உண்மையில் கலைஞர்களும், எழுத்தாளர்களும் மரணிப்பதேயில்லை. அவர்களது படைப்புக்கள், காலம் முழுவதும் அவர்களது பெயர்களை நிலைக்கச் செய்து கொண்டேயிருக்கும்.


அவ்வாறே, இலக்கிய ஆளுமை அசோகமித்திரனின் படைப்புக்கள் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும் சென்றுகொண்டேயிருக்கும். படைப்புக்களினூடு அவரும் வாழ்ந்துகொண்டேயிருப்பார் என்றென்றைக்கும் !

- எம்.ரிஷான் ஷெரீப்
24.03.2017

Thursday, January 26, 2017

போராட்டங்களும், காவல்துறையும், சித்திரவதைகளும், மனித உரிமைகளும் !

      மனிதர்களை சித்திரவதைக்குள்ளாக்குவதுவும், காணாமல் போகச் செய்வதுவும், சட்டவிரோதமான முறையில் படுகொலை செய்வதுவும் ஆட்சியில் நிலைத்திருக்க அவசியமானவை எனக் கருதுவதால் ஆட்சியிலிருக்கும் எல்லா அரசுகளுமே தமது ஆட்சியை எவர் தொந்தரவின்றியும் கொண்டு செல்வதற்காக இவற்றை பிரதானமாகப் பயன்படுத்துகின்றன. தாம் எதிர்க்கட்சியாக இருக்கும்போது இவற்றுக்கெதிராகக் குரல் கொடுக்கும் எல்லாக் கட்சிகளும், தாம் ஆட்சியைக் கைப்பற்றிய பின்பு, இவற்றையே தாமும் செய்கின்றன. கடந்த ஒவ்வொரு தசாப்த காலங்களிலும் மேற்சொன்ன நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது அதிகரித்துக் கொண்டு வந்திருக்கிறதே ஒழிய குறையவில்லை.

       ஒருவர் ஒரு குற்றம் செய்தால், அதனை விசாரித்து தக்க தண்டனை வழங்க நீதிமன்றத்தாலேயே முடியும். ஆனால் அதற்கு முன்பாக அந்த அதிகாரத்தை, வேறு நபர்கள் தம் கரங்களில் எடுத்துக் கொள்வதாலேயே குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதான மனித உரிமை மீறல்களும் சித்திரவதைகளும் ஆரம்பிக்கின்றன. எனவே பொது மக்களைக் காக்க வேண்டிய காவல்துறையை, தமக்குப் பாதுகாப்பும் நியாயமும் தேடி நாடுவதற்குத் தயங்குகின்றனர் மக்கள். எனினும், ஆதரவு தேடி நாடிச் செல்ல காவல்துறையைத் தவிர வேறு இடங்களும் இல்லை. பொதுமக்களுக்கு காவல்துறை மூலம் கிடைக்கப்பெறும் மோசமான அனுபவங்களுக்கு என்ன செய்வதெனத் தெரியாமல் தவிக்கும் அனேக மக்கள் உள்ளனர். சிலர் மனித உரிமைகளைக் காக்கும் ஒருங்கமைப்புக்களை நாடுகின்றனர்.

 

    இங்கு மனித உரிமைகள் மீறப்படுமிடத்து, முறைப்பாடுகளைப் பதிவு செய்வதில் உள்ள சிக்கல்கள், காவல்துறைக்கு எதிரான வழக்குகளுக்காக வாதாட துணிச்சலும் நம்பிக்கையுமுள்ள சட்டத்தரணிகளை தேடிக் கண்டுபிடிப்பதில் உள்ள சிக்கல்கள், முறையிடுபவரினதும் சாட்சிகளினதும் பாதுகாப்பு குறித்த சிக்கல்கள் ஆகியனவே பாதிக்கப்பட்டவர்களுக்கும் ஒருங்கமைப்புக்களுக்கும் பிரதானமான சிக்கல்களாக இதுவரை இருந்தன. தற்போது இவற்றோடு இன்னுமொரு சிக்கலும் புதிதாகச் சேர்ந்திருக்கிறது. அதாவது இவ்வளவு சிக்கல்களைத் தாண்டி ஒருவர் காவல்துறைக்கு எதிராக முறையிட்டு, அவ் வழக்கு விசாரணை, நீதிமன்றத்துக்கு வருமிடத்து, நீதிபதியால் அவ் வழக்கு தள்ளுபடி செய்யப்படுவது எனும் புதிய சிக்கல் பாதிக்கப்பட்டவருக்கு எதிராக எழுந்து நிற்கிறது.

         நான் இப்படிச் சொல்ல ஒரு வலுவான காரணம் இருக்கிறது. கடந்த காலங்களில் ஊழல்களையும், படுகொலைகளையும், கொள்ளைகளையும், பாலியல் வன்முறைகளையும் செய்து மாட்டிக் கொண்ட அரசியல்வாதிகளுக்கெதிராக இருந்த அனேக வழக்குகள் நீதிபதியால் தள்ளுபடி செய்யப்பட்டு, குற்றவாளிகள் வழக்குகளிலிருந்தும் விடுதலை செய்யப்பட்டார்கள். அத்தோடு சித்திரவதைகள் சம்பந்தமாகக் குற்றஞ்சாட்டப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கெதிரான அனேக வழக்குகளும் தள்ளுபடி செய்யப்பட்டு, தொடர்ந்தும் குற்றவாளிகள் நீதிபதியால் விடுதலை செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

 
    எனவே சித்திரவதைக்கு எதிராக எவ்வளவுதான் சட்டங்கள் இயற்றப்பட்டாலும், அதிகாரத் தரப்பும், காவல்துறையும் தாம் பொதுமக்களுக்கு இழைக்கும் அநீதங்களைத் தாமாக உணரும் வரையில் சித்திரவதையை ஒழிக்கவே முடியாது. இந் நிலை தொடருமிடத்து, சித்திரவதை உள்ளிட்ட அனைத்து மனித உரிமை மீறல்களும் மென்மேலும் வளர்ச்சியடையும் என்பதோடு, மனித உரிமைத் திணைக்களங்களும் ஒருங்கமைப்புக்களும் தமது பெயரில் மட்டுமே மனித உரிமையை வைத்திருப்பதுவும் தொடரும். எனவே மனித உரிமைகள் மீறப்படுவது தொடர்ந்தும் சர்வ சாதாரணமாக நிகழும். துரதிஷ்டவசமான இந் நிலைக்கு நாளை நானும், நீங்களும் ஆளாகலாம். அந் நாளில் எமக்காகப் பேசவும் எவருமிருக்க மாட்டார்கள். 

- எம்.ரிஷான் ஷெரீப்

Monday, January 23, 2017

மிருக வதை

எழுத்தாளர் ஜெயமோகனின் இணையத்தளத்தில், சிட்னியிலிருந்து கார்த்திக் எழுதிய 'மிருகவதை எனும் போலித்தனம்' எனும் கட்டுரைக்கான எனது பதில் கடிதம்.அன்பின் நண்பருக்கு,

'மிருக வதை எனும் போலித்தனம்' எனும் தலைப்பில் இன்று உங்கள் தளத்தில் வெளிவந்துள்ள கார்த்திக்கின் கட்டுரை பல நினைவுகளைத் தூண்டி விட்டது. நல்லதொரு பதிவு. அவரது பட்டியலில் இன்னும் சிலவற்றைச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

கனடா, அமெரிக்கா, நமீபியா, கிரீன்லாந்து, ஐஸ்லாந்து, நோர்வே, ரஷ்யா, ஃபின்லாந்து, ஸ்வீடன் ஆகிய ஒன்பது நாடுகளில் பிரசித்தமான கடல்வாழ் உயிரினங்களான சீல் பிராணிகளின் வேட்டை (Seal hunting) பல நூற்றாண்டுகளாகத் தொடர்ந்து வருவதும், விலங்குகளின் மீது திணிக்கப்படும் மிருக வதைகளில் மிகவும் முக்கியமானதும் ஆகும்.

மலையாள எழுத்தாளர் டி.டி.ராமகிருஷ்ணனின் ஆல்ஃபா நாவல், பேராசிரியர் குழுவொன்று ஒரு ஆராய்ச்சிக்காக ஆல்ஃபா எனும் தனித் தீவில் இருபத்தைந்து வருட காலம் வாழ்ந்த வாழ்க்கையைப் பற்றி சொல்கிறது. அப் பேராசிரியர் குழுவிலிருந்து உருவாகும் சந்ததிகளாக தீவில் எஞ்சிய நாற்பத்தெட்டு இளைஞர், யுவதிகள், சிறுவர், சிறுமிகள் தமது உணவுக்காக மீன்களை, பறவைகளை, விலங்குகளை வேட்டையாடி பச்சையாக உண்பதையும் ஒரு புனைவாக விபரித்திருப்பார் எழுத்தாளர். நம் ஆதி மனிதர்களும் அவ்வாறுதானே இருந்திருப்பர்? கற்காலத்தில் பசியின் தூண்டுதலில் சக விலங்கை வேட்டையாடிச் சுவைத்துப் பழகி, பசி நீங்கிய பின்னரும் வேட்டை என்பதே நடைமுறைப் பழக்கமாகி, பின்னர் அது தவிர்க்க முடியாததாக ஆகியிருக்கக் கூடும். அந்தப் பாரம்பரியத்தையே இந்த நூற்றாண்டிலும் கடல் சீல் பிராணிகளை, திமிங்கிலங்களை வேட்டையாடுவதன் மூலம் இன்றும் தொடர்கிறார்கள். அந்த வேட்டையை நியாயப்படுத்தும் சமூக நல ஆர்வலர்கள் இன்னும் இன்றும் இருப்பதுதான் ஆச்சரியமாகவும், ஆபத்தானதாகவும் இருக்கிறது.


அதைப் போலவே அண்மைக்காலமாக புதிதாக ஆனால் மிகவும் இலாபத்தைத் தரத்தக்க ஒரு வியாபாரமானது, இந் நூற்றாண்டில் தோன்றியிருக்கிறது. கர்ப்பிணிக் குதிரைகளின் குருதியை உறிஞ்சி (Pregnant horse blood trade) எடுத்து, ஐரோப்பிய மருந்துத் தொழிற்சாலைகளுக்கு ஏற்றுமதி செய்வது மிக இலாபம் தரும் தொழிலாக மாறியிருப்பதால், குதிரை வளம் கொண்ட அநேக நாடுகள் மறைமுகமாக இதனைச் செய்து வருவது குறிப்பிடத்தக்கது. இதற்காகவென்றே பண்ணைகளும் இருக்கின்றன.

ஆசிய நாடுகளில்தான் விவசாயத்துக்கென விலங்குகளை வளர்ப்பதுவும், பயிற்றுவிப்பதுவும் இன்னும் நடைமுறையிலிருக்கிறது. ஏனைய நாடுகளில் முக்கியமாக மத்திய கிழக்கு நாடுகளில் இறைச்சிக்காகவும், பொழுதுபோக்குக்காகவுமே அவை வளர்க்கப்படுகின்றன. மத்திய கிழக்கு நாடுகளுக்கு வித விதமான செல்லப்பிராணிகள் இறக்குமதி செய்யப்பட்டுக் கொண்டேயிருக்கின்றன. பல நிற வண்டுகள் முதற்கொண்டு கரடி வடிவிலான நாய்கள், கைக்கடக்கமான பூனைகள், சிறகு வெட்டப்பட்ட பேசும் கிளிகள், கழுகுகள் எனப் பலதும் அதில் அடங்கியிருக்கின்றன.

இங்கு இணைக்கப்பட்டுள்ள பனிக்கரடி வடிவத்தையொத்த நாய்க்குட்டி மூன்று மாத வயதுடையது. கார்த்திக் சொன்னதுபோல designer dog பிரிவில் இதனை உள்ளடக்கலாம். இதன் மயிர்கள் சுடப்பட்டு, தோலினூடாக வர்ணப் பூச்சுக்களையேற்றி பனிக்கரடியாக்கியிருக்கிறார்கள். வளர்ச்சிக்காக வேண்டி அதிக ஊட்டச்சத்துக்களும், ஊசி மருந்துகளும் ஊட்டப்படுகின்றன. ஒரு நாள் முழுவதுமாயினும், உடற்கழிவுகளை அகற்றாமலிருக்கப் பயிற்றுவிக்கப்படுகின்றன. பூனைகளின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தவும், அதன் எலும்புகளை முடங்கச் செய்யவும் சிறிய போத்தல்களில் போட்டு அடைத்து வைப்பதும் நடக்கிறது. சிட்டுக் குருவிகள் முதற்கொண்டு பல வகைப் பறவைகளையும் சிறகுகளை வெட்டி, கூட்டை விட்டு வெளியே விற்பனைக்காகக் காட்சிக்கு வைத்திருக்கிறார்கள்.

இவ்வாறான நாய்களையும், பூனைகளையும், ஏனைய விலங்குகளையும் ஒரு விளையாட்டுப் பொருள் போல வாங்கிச் செல்லும் அரேபியர்களும், ஏனையவர்களும், பின்னர் அவற்றைப் பராமரிக்க இயலாமல் தெருவில் எறிந்து விடுவதுவும் இங்கு சர்வ சாதாரணமாக நடக்கிறது. திடீரென தெருவில் விடப்படும் சடை வளர்த்த நாய்களும், பூனைகளும் தமக்கான உணவைத் தேட இயலாமல், தெருவில் நடமாடத் தெரியாமல், ஏனைய வலிய விலங்குகளினதோ அல்லது வாகனங்களினதோ தாக்குதல்களுக்கு இலக்காகி வீதிகளில் மரித்துக் கிடக்கும். சுத்திகரிப்பாளர்கள் தெருவை, இரத்தத்தைச் சுத்தப்படுத்தி விடுவார்கள். அந்த நாளும், அந்தப் பிராணியின் வாழ்க்கையும் அத்தோடு முடிந்து விடும்.

ஆனால், முடியாத ஒன்று இருக்கிறது. மேற்படி விலங்குகளை, பறவைகளை கொடூரமாகப் பயிற்றுவிக்கும் வேலைகளில், சொற்ப சம்பளங்களோடு ஈடுபடுத்தப்படுவது நமது இலங்கை, இந்திய, நேபாள, பங்களாதேஷ் நாட்டு இளைஞர்கள். வருடக்கணக்காக இதையே தொழிலாகச் செய்யும்போது அவர்களது சக உயிர்கள் மீதான கருணையும், மனிதாபிமானமும் மரித்துப் போகத்தான் செய்யும். அவர்கள் தமது நாடுகளுக்குத் திரும்பும்போது அம் முரட்டுத்தனத்தை, அக் காருண்யமற்ற நடத்தைகளை அவர்கள் தம்மோடு தமது கிராமங்களுக்குக் காவி வருவது ஆபத்தானது. சாதாரணமாக விலங்குகள், பறவைகளைக் காணும்போது கூட அவர்கள் அதற்கு ஏதாவது தீங்கினைச் செய்து விடுகிறார்கள். அவர்களைப் பற்றிப் பேசுவதற்கோ,  அவ்வாறானவர்களின் மனப் பிறழ்வுகளை மாற்றியமைக்கும் சிகிச்சையளிப்பதற்கோ எந்த விலங்கு நல அமைப்புக்களும், சமூக நல ஆர்வலர்களும்  முன்வருவதில்லை என்பது இன்னும் மிக மிக ஆபத்தானது.

- எம்.ரிஷான் ஷெரீப்

(இக் கடிதத்தை எழுத்தாளர் ஜெயமோகனின் இணையத்தளத்திலும் வாசிக்கலாம்.)

Sunday, January 8, 2017

'அடைக்கலப் பாம்புகள்' - சிறுகதைத் தொகுப்பு வெளியீடு

அன்பின் நண்பர்களுக்கு,

இந்த வருடத்தில், இந்த வாரம் சென்னை, சர்வதேச புத்தகக் கண்காட்சியில் வெளிவந்திருக்கும் எனது மற்றுமொரு புத்தகம் ‘அடைக்கலப் பாம்புகள்’ எனும் சிறுகதைத் தொகுப்பு. 

பிரபல ‘வம்சி’ பதிப்பக வெளியீடாக வந்திருக்கும் இத் தொகுப்பில், விருதுகள், பரிசுகளை வென்ற சிறுகதைகள் மற்றும் புதிய சிறுகதைகளுமாக எனது 25 சிறுகதைகள் உள்ளடக்கப்பட்டிருக்கின்றன. இதில் அடங்கியுள்ள சிறுகதைகளைக் குறித்து, நூலின் பின்னட்டை வாசகங்கள் தெளிவுபடுத்தும் என நம்புகிறேன்.

இத் தொகுப்பையும், சென்னையில் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை நடைபெறவிருக்கும் நடைபெறவிருக்கும் சர்வதேச புத்தகக் கண்காட்சியில், 'வம்சி' பதிப்பக அரங்குகளில் (எண்:293,294) பெற்றுக் கொள்ளலாம்.

என்றும் அன்புடன்,
எம்.ரிஷான் ஷெரீப்
08.01.2017

Saturday, January 7, 2017

எனது 'இறுதி மணித்தியாலம்'

அன்பின் நண்பர்களுக்கு,

எனது இந்த வருடத்தின் முதல் புத்தகமாக, இந்தியாவின் சிறந்த பதிப்பகங்களுள் ஒன்றான 'வம்சி' பதிப்பக வெளியீடாக 'இறுதி மணித்தியாலம்' எனும் மொழிபெயர்ப்புத் தொகுப்பு இந்த வாரம் வெளிவருவதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இலங்கையில் சிங்கள மொழியில் சிறுபான்மை சமூகங்களுக்காக எழுதி வரும் சிறந்த சிங்களக் கவிஞர்கள், கவிதாயினிகளது முக்கியமான கவிதைகள் பலவும் என்னால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு இதில் உள்ளடக்கப்பட்டிருக்கின்றன. தொகுப்பிற்கு காத்திரமானதோர் முன்னுரையை மதிப்பிற்கும், நேசத்திற்குமுரிய எழுத்தாளர் கருணாகரன் எழுதியிருக்கிறார். 

இத் தொகுப்பை சென்னையில் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை நடைபெறவிருக்கும் சர்வதேச புத்தகக் கண்காட்சியில், 'வம்சி' பதிப்பக அரங்குகளில் (எண்:293,294) பெற்றுக் கொள்ளலாம். 

என்றும் அன்புடன்,
எம்.ரிஷான் ஷெரீப் 
07.01.2017